தமிழ்நாடு

tamil nadu

சென்னை விமான நிலைய கழிவறையில் 1.5 கிலோ தங்கப் பசை பறிமுதல் - ஒப்பந்த ஊழியர் கைது!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 8:17 AM IST

Gold Paste Seized in Chennai Airport: சென்னை விமான நிலைய கழிவறைக்குள் மறைத்து வைத்திருந்த சுமார் 1.5 கிலோ தங்கப் பசையை, கடத்தல் பயணியிடம் கொடுக்க முயன்ற ஒப்பந்த ஊழியரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

Gold Paste Seized in chennai airport
தங்கப் பசை பறிமுதல்

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் டிரான்சிட் பயணிகள் விமானம், மீண்டும் மற்றொரு புறப்பாடு விமானத்தில் ஏறுவதற்காக மேல் தளம் செல்லும் வழியில், டிரான்சிட் பயணிகள் வசதிக்காக கழிவறை உள்ளது. அந்த கழிவறைக்குள் நேற்று (நவ.20) காலையில், சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியரான மேப்லீன் (32) என்பவர் சென்று விட்டு, நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்துள்ளார்.

அதனைக் கண்காணித்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் ஒப்பந்த ஊழியர் மேப்லீனை பின் தொடர்ந்துள்ளனர். அப்போது அந்த ஊழியர், சர்வதேச முனையத்தில் இருந்து வெளியில் வந்து, உள்நாட்டு முனையம் டெர்மினல் 1-க்குச் சென்றுள்ளார். பின்னர் சுங்க அதிகாரிகள் அவரை அங்கேயே நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, ஊழியர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அதனால் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர் மேப்லீனை, சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்துள்ளனர். அப்போது, அவருடைய உள்ளாடைக்குள் ஒரு பார்சல் இருந்துள்ளது. அந்த பார்சலை வெளியில் எடுத்துப் பார்த்தபோது, அதனுள் தங்கப்பசை இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், பார்சலில் இருந்த 1.5 கிலோ தங்கப் பசையை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போது அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஒப்பந்த ஊழியர் மேப்லீனை கைது செய்த சுங்க அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த விசாரணையில், துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர், இந்த தங்கப்பசையை கடத்திக் கொண்டு வந்து, டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அதனை இந்த ஒப்பந்த ஊழியர் எடுத்து, உள்நாட்டு முனையத்தில் நிற்கும் கடத்தல் பயணியிடம் கொடுக்க கொண்டு வந்துள்ளார்.

ஆனால் ஒப்பந்த ஊழியர் மேப்லீன், சுங்கத்துறையிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் தெரிந்ததும், கடத்தல் பயணி தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுங்க அதிகாரிகள், சென்னை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம், துபாயிலிருந்து தங்கப் பசையை கடத்தி வந்து, விமான நிலைய கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு தலைமறைவான கடத்தல் பயணியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அனலாக் முறையில் கேபிள் டிவி சேவைக்கு அனுமதி மறுக்க கோரிய வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details