தமிழ்நாடு

tamil nadu

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

By

Published : May 23, 2023, 1:43 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை:மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த உயா் நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.சக்திவேல், சென்னை தொழிலாளா் நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.குமரப்பன் மற்றும் கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே.ராஜசேகர் ஆகிய 4 பேரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் 4 புதிய நீதிபதிகளின் பதவியேற்பு நிகழ்ச்சி, இன்று (மே 23) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, புதிய நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனையடுத்து புதிய நீதிபதிகளை வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், “புதிய நீதிபதிகளான சக்திவேல், தனபால் மற்றும் குமரப்பன் ஆகியோர் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர்களாகவும், நீதிபதி ராஜசேகர் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராகவும், உயர் நீதிமன்றத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், உயர் நீதிமன்றத்தின் மரபுகளை உறுதிப்படுத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறுகையில், “பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றிய புதிய நீதிபதிகளின் அனுபவம் சிறந்த முறையில் பலன் அளிக்கும்” என்றார். மேலும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், புதிய நீதிபதிகளை வரவேற்றுப் பேசினர்.

இதன் பின்னர் ஏற்புரை ஆற்றிய நீதிபதி சக்திவேல், “உயர் நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை எனக்கு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார். அதேபோல் நீதிபதி தனபால், ’’பள்ளிப் படிப்பு முதல் தமிழ் வழியில் படித்ததாகவும், தமிழ் வழியில் படித்த வழக்கறிஞர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம் எனவும், இயலாதது என்ற எதுவுமில்லை’’ என்றும் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதாக நீதிபதி குமரப்பன் தெரிவித்தார். மேலும், புதிதாக இன்று பதவி ஏற்றுள்ள நீதிபதிகள் உடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 75 பணியிடங்களில் இன்னும் 11 நீதிபதி பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Aryan Khan Case : சமீர் வான்கடே மீதான நடவடிக்கைக்கு தடை - சிபிஐக்கு முட்டுக்கட்டை போட்ட மும்பை உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details