தமிழ்நாடு

tamil nadu

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான 4 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் - மத்திய அரசு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 9:05 PM IST

Rajiv Gandhi Murder Case: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் பாஸ்போர்ட் கிடைத்ததும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என மத்திய அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இலங்கை நாட்டைச் சேர்ந்த முருகன் தற்போது திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தனது கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி, அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புவதாகவும், பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக அவர் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அகதிகள் முகாமில் உள்ள அவரால் அங்கிருந்து வெளிவர முடியவில்லை எனவும், திருவான்மியூரில் வசிக்கும் தன்னுடன் சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் எனவும், முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசின் வெளிநாட்டினருக்கான பதிவு மண்டல அலுவலக அதிகாரி அருண் சக்திகுமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், மத்திய வெளியுறவுத்துறை விதிகளின் படி, சிறையில் இருந்து விடுதலையாகும் வெளிநாட்டினர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர் என்றும், மனுதாரர் நளினியின் கணவர் முருகன் மற்றும் விடுதலையான சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் இலங்கைத் தமிழர்கள் என்றாலும், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல், கள்ளத் தோணி மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதால், தற்போது அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதகரத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவை கிடைத்தவுடன் நான்கு பேரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும்படிங்க:விஜயலட்சுமியிடம் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சீமான் தரப்பில் வக்கீல் நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details