தமிழ்நாடு

tamil nadu

ராஜீவ் தயங்கியதை ராகுல் ஆதரிப்பது ஏன்? - வி.பி. சிங் மகன் பிரத்யேக பேட்டி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 2:46 PM IST

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை தற்போதைய காங்கிரஸ் மற்றும் பாஜக ஏற்றுக் கொண்டது, அப்போதைய தலைவர்களை விட எனது தந்தையின் அரசியல் சிந்தனை 30 ஆண்டுகள் முன்னோக்கி இருந்ததை நிரூபித்து உள்ளதாக முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மகன் அஜெய், ஈ.டிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை : கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு, சென்னையில் சிலை அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து இன்று மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் சிலையினை திறந்து வைத்தார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மகன் அஜெய் ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார். அதில், அவர், "தந்தையின் சிலை திறப்பை மண்டல் கமிஷனின் மறுபிறப்பாக பார்ப்பதாக தெரிவித்து உள்ளார். 1990ஆம் ஆண்டு மண்டல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்திய போது, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, அதைச் செயல்படுத்துவது பிரச்சினைக்குரியது என்று தெரிவித்ததாகவும், ஆனால் தற்போது அவரது மகன் ராகுல் காந்தியின் பயணம் வி.பி.சிங் அமைத்த வழியில் இருக்கிறது, பாஜகவை பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான கட்சி என விமர்சிக்கவும் ராகுல் தவறுவதில்லை" எனவும் கூறினார்.

மண்டல் கமிஷன் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டு சேர்ந்து தனது தந்தையின் அரசை கவிழ்த்ததாகவும், ஆனால் தற்போது இரு கட்சிகளும் அதை ஏற்றுக்கொண்டு இருப்பது அரசியல் யதார்த்தமாக மாறிவிட்டதாகவும் அஜெய் தெரிவித்து உள்ளார். இதுவே அப்போதைய தலைவர்களை விட எனது தந்தையின் அரசியல் சிந்தனை 30 ஆண்டுகள் முன்னோக்கி இருந்தது என்பதை நிரூபிக்கிறது என்று அஜெய் தெரிவித்தார்.

1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வி.பி.சிங்கின் ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி 143 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அமைக்க போதிய மெஜாரிட்டி இல்லாத நிலையில், இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. வி.பி.சிங் பிரதமராக பதவியேற்றார்.

1979 ஆம் ஆண்டு முன்னாள் பீகார் முதலமைச்சர் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த குழு கடந்த 1990 ஆம் ஆண்டு அளித்த பரிந்துரையை ஏற்று அப்போதைய பிரதமர் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.

1980ஆம் ஆண்டு மண்டல் குழு பரிந்துரை அளித்து இருந்தாலும், அப்போதைய அரசியல் நிலவரம், இந்திரா காந்தியின் ஆட்சி கவிழ்ப்பு உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போனதாக கூறப்பட்டது. வி.பி.சிங் பிரதமராக பொறுப்பேற்றதும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.

இதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பாஜக தனது ஆதரவை விலகிக் கொண்ட நிலையில், வி.பி.சிங் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இந்நிலையில், வி.பி. சிங்கிற்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் சிலை திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :தமிழீழ மாவீரர்கள் தினத்தில் சமூக நீதி காவலர் வி.பி.சிங்கிற்கு சிலை திறப்பு! - முதலமைச்சர் திறந்து வைப்பு!

ABOUT THE AUTHOR

...view details