தமிழ்நாடு

tamil nadu

ரயில் விபத்தில் காயமடைந்தோர் குறித்து திமுக முரணான தகவல்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

By

Published : Jun 6, 2023, 10:17 AM IST

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களின் உண்மை விவரத்தை தமிழக அரசு வெளிப்படையாகவும், முறையாகவும் அறிவிக்காமல் முரணான தகவலை வெளியிட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து முரணான தகவல் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு
ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்து முரணான தகவல் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 128-வது பிறந்தநாளையொட்டி திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது துயிலிடத்தில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், வளர்மதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போதை மாநிலம் என்று சொல்லும் அளவிற்கு போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கொண்டு வரப்படுகிறது. அரசு டாஸ்மாக் கடைகளில் குடித்தவர்களே மரணமடைந்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் மீது அச்சம் உருவாகும் அளவிற்கு நிலமை உள்ளது.

மதுபானங்களில் கலப்படம், கள்ளச்சாராய சாவு இதற்கெல்லாம் முழுக்க முழுக்க இந்த விடியாத அரசு பொறுப்பேற்க வேண்டும். ஒடிசா ரயில் விபத்து ஒரு துயரமான சம்பவம், இந்த விபத்து தொடர்பாக விசாரணை செய்ய சி.பி.ஐக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் குழு சென்றது. ஆனால் சம்பவ இடத்திற்கே போகவில்லை.

பிரதமர் வருகையை காரணம் காட்டி விடவில்லை என்பதெல்லாம் முதலமைச்சரின் மகன் உதயநிதி ஒரு காரணமாக கூறலாமா?, இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சுற்றுலா சென்று வந்தது போல சென்று வந்துள்ளனர். ஒரு துயர சம்பவத்திற்கு செல்லும்போது கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு ஷூட்டிங் போவது போல சுற்றுலா சென்று வந்துள்ளனர். ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் பட்டியல் தெரிந்து விட்டது.

அதை வைத்து கணக்கு சொல்கிறீர்கள். 150 உடல்கள் அடையாளப்படுத்த முடியாமல் உள்ளது. விசாரித்து ஒட்டு மொத்தமாக அறிக்கை தர வேண்டும். ஆனால் முந்திரிக்கொட்டை போல இன்னும் ஐந்து பேர் நிலை என்ன என்று தெரியவில்லை, ஆனால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

எத்தனை பேர் பயணித்தனர்? எத்தனை பேர் முன்பதிவு இல்லாமல் பயணித்தனர்? எத்தனை பேர் மருத்துவமனையில் உள்ளனர்? எத்தனை பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் பெற்றனர்? அவர்களது நிலவரம் என்ன? என்பது குறித்து முழுமையான அறிக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்த ஆய்வு கூலிங் கிளாஸ் ஃபேமிலி போயிட்டு வந்தது போல தான் உள்ளது. கூலிங் கிளாஸ் போடலாம் தவறில்லை, ஆனால் முறையாக செயல்பட வேண்டும்.

இந்த அரசு, தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு எதையும் நிறைவேற்ற வில்லை. இஸ்லாமியர்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வேன் என்றார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது ஏன் விடுதலை செய்யவில்லை. இஸ்லாமிய மக்கள் புறக்கணிக்கப்படுவது தான் இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

ஆளுநரை பொறுத்தவரை, வேந்தர் என்ற அடிப்படையில் துணை வேந்தர்களை கூட்டத்திற்கு அழைத்துள்ளார். அது தவறு ஒன்றும் இல்லை. ஆனால், உயர்கல்வித்துறை அமைச்சரின் கூற்றை நாம் பார்க்க வேண்டும். துணைவேந்தர்கள் எதிர்காலத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு எல்லாம் பின்னாடி இருக்கு என ஒரு அமைச்சர் துணைவேந்தரை மிரட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கண்டனத்திற்கு உரியது.

மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. ஏற்கனவே மின்கட்டணத்தை உயர்த்தி மக்கள் கடும் சுமைக்கு ஆளாகியுள்ள நிலையில், மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்துவது ஏற்கத்தக்கதல்ல. இந்திய வரலாற்றிலேயே வருமான வரித்துறை 8 நாட்கள் சோதனை செய்த வரலாறே கிடையாது. இது சக அமைச்சர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்குள்ளேயே இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர். செந்தில் பாலாஜியை தொடர்ந்து இன்னும் பல அமைச்சர்கள் இந்த பட்டியலில் தொடர்வார்கள்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:சிறைவாசிகளின் உணவு முறையில் மாற்றம் - அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

ABOUT THE AUTHOR

...view details