தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிணை மனு தள்ளுபடி

By

Published : Feb 25, 2022, 7:53 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி
ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது 49ஆவது வார்டுக்குள்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாகப் புகார் எழுந்ததையடுத்து, ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் அங்கிருந்த திமுக பிரமுகர் நரேஷை தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்தச் சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் ஜெயக்குமார் நேரலையாகக் காட்டியதால், சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் நரேஷ் அளித்த புகாரில் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பிப்ரவரி 21ஆம் தேதி கைதாகி மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட ஜெயக்குமார், பிணை கேட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, ஜெயக்குமார் மீதான வழக்கில் கொலை முயற்சி, தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்று அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் பிணை கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி எஸ். அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் காணொலி ஆதாரங்களிலுள்ள அதிமுக உறுப்பினர்களை அடையாளம் காண உள்ளதால், ஜெயக்குமாருக்கு பிணை வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜன், ஒரு சம்பவம் நடைபெறும்போது அதைச் சமூக ஊடகங்களில் வெளியிட எந்தத் தடையும் இல்லை எனவும் அதிமுக மற்ற உறுப்பினர்களை அடையாளம் காண ஜெயக்குமார் இருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமார் மீதான விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் பிணை வழங்க முடியாது எனத் தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க:ஜெயக்குமாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details