தமிழ்நாடு

tamil nadu

நடுவானில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காரைக்குடியைச் சேர்ந்த இளைஞர் கைது!

By

Published : Jul 20, 2023, 10:00 PM IST

அபுதாபியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

female passenger sexually harassed on mid air
நடுவானில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

சென்னை:அபுதாபியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (ஜூலை 19) வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் சுமார் 156 பயணிகள் பயணித்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் திடீரென கூச்சல் போட்டு கத்தியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த சக பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்களும் அந்த இளம் பெண்ணிடம் என்ன நடந்தது எனக் கேட்டுள்ளனர்.

அப்போது அந்த இளம் பெண் இருக்கைக்கு பின் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணி இருக்கைகளுக்கு இடையே கையை விட்டு, தன்னை தொடக்கூடாத இடங்களில் தொட்டு, பாலியல் தொல்லை கொடுப்பதாக பதற்றத்துடன் கூறினார். இதை அடுத்து அந்த இளைஞரை விமான பணிப்பெண்கள் சக பயணிகளும் கடுமையாக கண்டித்துள்ளனர்.

கை என்றால் படத்தான் செய்யும்: இந்நிலையில் அந்த இளைஞர் தூக்கத்தில் தவறுதலாக கைபட்டு விட்டதாக கூறியுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட இளம் பெண் இளைஞர் பொய் சொல்கிறார் எனவும், ஒருமுறை அல்ல தொடர்ந்து சில முறை அவருடைய கைகள் என்னை நோக்கி வந்தன. நான் அவருடைய கைகளை பலமுறை தட்டி விட்டேன். ஆனாலும் தொடர்ந்து அவர் அதைப்போல் செய்தார் என்று புகார் கூறினார்.

இதை அடுத்து விமான பணிப்பெண்கள் விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்த நிலையில் உடனே விமான கேப்டன் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து பாதுகாப்பு அதிகாரிகளை தயார் நிலையில் இருக்கும்படி செய்தார்.

அதன் பின்பு அந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. உடனடியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி பெண் பயணிக்கு தொல்லை கொடுத்த இளைஞரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இதையும் படிங்க:மணிப்பூர் பழங்குடியின பெண்கள் விவகாரம்... முக்கிய குற்றவாளி கைது - போலீசார் தகவல்!

அதோடு அவரை பாதுகாப்புடன் சுங்கச் சோதனை, குடியுரிமைச் சோதனைகளை முடித்த பின்பு விமான நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர் பயணிகள் விமானத்தில் சக பயணியின் மீது தெரியாமல் கைகள் படத்தான் செய்யும் அது ஒரு குற்றமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை அடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதோடு புகார் கொடுப்பதற்காக அந்தப் பெண் பயணியும் போலீஸ் நிலையம் சென்றார்.

இதற்கு இடையே விமானத்தில் வீராப்பு பேசிய அந்த இளைஞர் போலீஸ் நிலையம் வந்ததும் திடீரென பல்டி அடித்தார். 'ஏதோ தெரியாமல் செய்துவிட்டேன்; என்னை மன்னித்து விடுங்கள்' என்று கதறி அழுதுள்ளார். அதோடு 'அந்த பெண் பயணியிடமும் மன்னிப்புக்கேட்டு, நான் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்துவிட்டு விடுமுறையில் சொந்த ஊர் வருகிறேன். நீங்கள் புகார் செய்தால் என் வேலையும் போய்விடும்' என்று கூறி கதறியுள்ளார்.

அதன் அடிப்படையில் அந்தப் பெண் பயணி முதலில் புகார் கொடுப்பதற்குத் தயங்கினார். அதன் பின்பு இவர்களை இதைப்போல் விட்டால், தொடர்ந்து விமான பயணத்தின்போது, மேலும் சில பெண் பயணிகளுக்கு தொல்லை கொடுப்பார்கள். எனவே தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று அந்தப் பெண் பயணி துணிச்சலாக சென்னை விமான நிலையப் போலீசில் புகார் அளித்தார்

இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார் பெண் பயணியின் புகாரைப் பதிவு செய்தனர். பின் விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் சக்தி (28) எனவும்; அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர் சவுதி அரேபியாவில் கூலி வேலை செய்து வந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தார் என்றும் தெரியவந்தது. பின்னர் விமானத்துக்குள் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த சக்தியை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், விமான பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குகள் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அதோடு அவரை இன்று (ஜூலை 20) காலை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விமானத்தில் தொடர்ந்து நடக்கும் பாலியல் தொல்லை:சென்னை விமான நிலையத்தில் இதைப்போன்ற சம்பவங்கள் ஏற்கனவே இரு முறை நடந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து கொச்சி சென்ற தனியார் பயணிகள் விமானத்தில் சின்னத்திரை நடிகை ஒருவரிடம், கேரள மாநில அமைச்சர் சில்மிஷம் செய்தார் என்று புகார் கூறப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதைப்போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பெண் டாக்டர் ஒருவருக்கு பின் சீட்டில், இருந்த வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்ததாகப் புகார் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் அதை சமூக வலைதளத்தில் பதிவு செய்துவிட்டார். இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் தற்போது நடந்தது மூன்றாவது சம்பவம். இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:காதலித்து ஏமாற்றியதாக விக்ரமன் மீது புகார் - கமிஷனர் அலுவலகம் வரை சென்ற விவகாரம்!

ABOUT THE AUTHOR

...view details