தமிழ்நாடு

tamil nadu

உயர்நீதிமன்ற முன்ஜாமின் ஆவணங்களில் மோசடி; திமுகவை சேர்ந்த இருவர் கைது

By

Published : Dec 3, 2022, 9:56 AM IST

நில அபகரிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றதற்கான ஆவணங்களில் மாற்றம் செய்து மோசடி செய்த விவகாரத்தில் திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

உயர்நீதிமன்ற முன்ஜாமின் ஆவணங்களில் மோசடி
உயர்நீதிமன்ற முன்ஜாமின் ஆவணங்களில் மோசடி

சென்னை: சோழிங்கநல்லூரை சேர்ந்த தொழிலதிபரான அமர்ராம் என்பவரை கடந்த அக்டோபர் மாதம் ஒரு கும்பல் கடத்திச் சென்றது. பின்னர் 60 கோடி மதிப்புள்ள அவரது இடத்தை வெறும் 60 லட்சம் கொடுத்து அபகரித்தது. திமுக 124வது வார்டு கவுன்சிலரான விமலா மற்றும் அவரது கணவர் திமுக வட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தூண்டுதலின் பேரில் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.

இந்த நில அபகரிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட அமர்ராம் கொடுத்த புகாரில் திமுக கவுன்சிலர் விமலா மற்றும் வட்டசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட 10 பேர் மீது மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக பெண் கவுன்சிலர் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் வட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தியின் சகோதரியான நாகலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான 58 செண்ட் நிலத்தை வட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி போலியான ஆவணங்களை தயாரித்து அபகரித்துவிட்டதாக தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்த புகாரில் வட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் பெற்ற கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் மெரினா காவல் நிலையத்தில் தொழிலதிபர் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற ஆவணங்களை, எழும்பூர் 13வது எம்.எம் மேஜிஸ்ட்ரேட் சக்திவேல் முன்பு இன்று கவுன்சிலர் விமலா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சமர்பித்துள்ளனர். இந்த ஆவணங்களை மேஜிஸ்ட்ரேட் சரிபார்த்த போது உயர்நீதிமன்ற முன்ஜாமீன் உத்தரவு நகலில் மாற்றம் செய்தது மேஜிஸ்ட்ரேட்டுக்கு தெரியவந்தது.

குறிப்பாக உயர்நீதிமன்றம் முன்ஜாமின் உத்தரவு அளித்த பிறகு, உயர்நீதிமன்றம் உத்தரவில் நிபந்தனைகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் நிறைவேற்றி சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்து முறையாக முன்ஜாமின் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் ஜாமீனில் திமுக வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வெளி வருவதில் காலதாமதம் ஆனதால், மெரினா காவல் நிலைய கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த முன்ஜாமினை உரிய காலகட்டத்திற்குள் நிபந்தனைகளை நிறைவேற்றி விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து முன் ஜாமின் பெறவில்லை.

குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் முன்ஜாமின் உத்தரவை உரிய முறையில் சமர்ப்பிக்காததால் உயர்நீதிமன்ற உத்தரவு நகலில் காலம் தாழ்த்தப்பட்டதை மறைக்க திருத்தம் செய்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மேஜிஸ்ட்ரேட் உத்தரவுப்படி மோசடி செய்து உயர்நீதிமன்ற முன்ஜாமின் ஆவணங்களை சமர்ப்பித்த இருவரையும் எழும்பூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் உயர்நீதிமன்றம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் விமலா ஆகியோருக்கு வழங்கிய முன்ஜாமின் உத்தரவை ரத்து செய்வதற்கான நடவடிக்கையும் காவல்துறை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றும் பணிகள் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details