தமிழ்நாடு

tamil nadu

பொறியியல் மாணவர் சேர்க்கை: அறிவிப்பு வெளியாவது எப்போது? காத்திருக்கும் மாணவர்கள்!

By

Published : May 1, 2023, 3:58 PM IST

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Engineering classes
பொறியியல் மாணவர் சேர்க்கை

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக் கழகம் அளித்து வருகிறது. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று தமிழ்நாட்டில் 2022-2023ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக் படிப்புகளில், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள் 5, மாநில அரசின் பொறியியல் கல்லூரிகள் 11, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 3, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 408 என்ற எண்ணிக்கையில் செயல்பட்டு வந்தன. இதில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

விண்ணப்பிக்காத 6 கல்லூரிகள்: இந்நிலையில் 2023-24ம் கல்வியாண்டு விரைவில் தொடங்க உள்ளது. அந்த வகையில் புதிய கல்வியாண்டில் அங்கீகாரம் பெறுவதற்கு 402 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்துள்ளன. எனினும், 6 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கவில்லை. இதனால் அந்தக் கல்லூரிகளில் வரும் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 134 பொறியியல் கல்லூரிகளில் கணினி சார்ந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் இடங்களை கேட்டும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவுறுத்தல்: தமிழ்நாட்டில் மார்ச் 13ம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் 3ம் தேதி நிறைவடைந்தது. தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு காரணமாக மே 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதற்கிடையே, உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் அனைத்து மாணவர்களும் கல்லூரியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

மே 4ம் தேதி தொடக்கம்?: இந்நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை குறித்து உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் கூறும்போது, "பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மே 4ம் தேதியில் இருந்து தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஓரிரு நாட்களில் அறிவிப்பார். மாணவர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்றாலும், சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் வரையில் கலந்தாய்வு நடத்தப்படாது.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எனினும், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் விண்ணப்பம் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க முடியும்" எனக் கூறினார்.

பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு, சுமார் 2 லட்சம் இடங்கள் இருக்கின்றன. கலந்தாய்வை கடந்தாண்டைப் போலவே ஆன்லைன் மூலம் 4 சுற்றுகளாக நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: அரை நிர்வாணமாக அவமானப்படுத்திய போலீஸ்.. ஜெனரேட்டர் ரூமில் நடந்த கொடுமை.. ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் நடந்ததை விளக்கும் அரவிந்தசாமி!

ABOUT THE AUTHOR

...view details