தமிழ்நாடு

tamil nadu

நாளை முதல் அமலுக்கு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு.. விதிமுறைகள் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 9:44 PM IST

TN Apartment EB tariff cut: தமிழ்நாட்டில் மின் தூக்கி (லிஃப்ட்) உள்ளிட்ட வசதிகள் இல்லாத சிறிய அபார்ட்மெண்ட்டுகளுக்கான மின் கட்டணத்தை குறைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:3 மாடிகளைக் கொண்ட 10 வீடுகளுக்கும் குறைவான வீடுகளைக் கொண்ட மின்தூக்கி (லிஃப்ட்) வசதியில்லாத குடியிருப்புகளுக்கு, பொது பயன்பாட்டிற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை 8 ரூபாயிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த படி, நாளை இந்நடைமுறை அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி ID-யை மின் கட்டண ஆணை எண் 7 நாள் 9.9.2022-ல் உருவாக்கியது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 18.10.2023 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது, எனவும் இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்றும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் கருத்துகள் தெரிவித்திருந்தன.

இதனை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய் 15 பைசாவிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கொள்கை வழிக்காட்டுதலின் படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை IE-ஐ அறிமுகப்படுத்தியும் இக்குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் ரூ.5.50 யூனிட் என நிர்ணயித்தும் 01.11.2023 முதல் அமலுக்கு வருமாறு ஆணை எண்: 9, நாள்: 31.10.2023 மூலம் வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அபார்ட்மெண்ட்வாசிகளுக்கு நற்செய்தி.. மின்கட்டணத்தை குறைத்து அதிரடி அறிவிப்பு..

ABOUT THE AUTHOR

...view details