தமிழ்நாடு

tamil nadu

தென்மாவட்ட வெள்ள பாதிப்பு; நிவாரணத் தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 2:06 PM IST

Flood Relief Amount: தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரத்திலிருந்து, 15 ஆயிரமாக நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Edappadi Palaniswami requests that the state government increase the flood relief amount
வெள்ள நிவாரணத் தொகையை உயர்த்த எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணத் தொகையை ரூ.6 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் மிக்ஜாம் புயலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளவில்லை.

அதன் காரணமாக கனமழையால் பொதுமக்களுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. அதேபோன்று, நிவாரணங்களும் காலதாமதமாக மூன்று நாட்கள் கழித்து கொடுக்கப்பட்டது. குறிப்பாக, வடசென்னை கடற்கரை பகுதியில் கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் கசிந்துள்ள கச்சா எண்ணெய்யை அப்புறப்படுத்துவதற்கு, சரியான தொழில்நுட்பம் பயன்படுத்தவில்லை.

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முறையாக சென்னையில் கையாளவில்லை. சென்னையில் வெள்ள பாதிப்புகளை கையாண்டது போல் இல்லாமல், தென் மாவட்டங்களிலாவது முறையாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையத்தை குறை கூறுவது வேதனை அளிப்பதாக உள்ளது.

ஒரு மாநில அரசு, இயற்கை சீற்றம் என்றால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். பெரிய அளவில் மழை பெய்தாலோ அல்லது அதனால் வெள்ளை பாதிப்பு ஏற்பட்டாலோ, அதனை கையாளுவதற்கு அரசு அனைத்து துறைகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஆனால், இப்போது இருக்கக்கூடிய அரசு, அது போன்ற தயார் நிலையில் இல்லாத காரணத்தினால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான கனமழை பெய்ததை அடுத்து, அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால், அரசு தயார் நிலையில் இருந்திருந்தால் இந்த அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. தென் மாவட்ட மக்கள் மழை வெள்ளத்தால் தங்களது உடைமைகள் மற்றும் வாகனங்களை இழந்துள்ளனர். கனமழையால், வியாபாரிகள் கடைகளில் உள்ள விற்பனைப் பொருட்களையும் மற்றும் விவசாயிகள் நெல், வாழை, வெற்றிலை போன்ற பல வகையான இழப்புகளையும் சந்தித்துள்ளனர்.

மேலும், அவர்கள் வளர்த்த கால்நடைகளையும் இழந்துள்ளனர். இதனால் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு அரசு அறிவித்துள்ள 6 ஆயிரம் ரூபாயில் இருந்து, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ள வீடுகள், விளைநிலங்கள், வணிக நிறுவனங்கள், உப்பளங்கள், பாதிக்கப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு, அனைவருக்கும் உரிய நிவாரணம் அளிப்பதுடன், மீண்டும் அவர்கள் தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும்” என இந்த அறிக்கை மூலமாக எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க:டிச.26-இல் தூத்துக்குடி வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ABOUT THE AUTHOR

...view details