தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர்களிடம் கேள்வி கேட்டால் சபாநாயகர் பதில் கூறுவதா? - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 4:03 PM IST

Edappadi K. Palaniswami: அமைச்சர்களிடம் கேட்கப்படும் கேள்விக்கு முதலமைச்சர், அமைச்சர் பதில் கூறுவதற்கு முன்பே பேரவைத் தலைவர் குறுக்கிட்டு பல கேள்விக்குத் பதிலை கூறுகிறார். இதனால், மக்கள் பிரச்னைக்குத் தீர்வு காண முடியவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின்போது எதிர்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியது சட்டபேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர், சட்டப்பேரவை வாயிலில் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவை எதிர்கட்சித் துணை தலைவர் நியமனம் மற்றும் நீக்கப்பட்ட 3 சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறித்து பல முறை பேரவை தலைவரிடம் கடிதம் கொடுத்தும் அவர் தீர்வு காணவில்லை. இதுவரை 10 முறை பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். உயர் நீதிமன்ற தீர்ப்பின் நகலையும் வழங்கியுள்ளோம். ஆனால், இது குறித்து எங்களை முழுமையாக பேச அனுமதிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட கட்சி, அந்த கட்சிக்கு கூட பேரவையில் தலைவர் துணைத் தலைவர் பொறுப்பு கொடுத்துளனர். பேரவை என்பது பேரவை தலைவரின் தனிப்பட்ட உரிமை, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அருகில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அமர வைப்பது காலம் காலாமக இருக்கும் மரபு. பேரவைத் தலைவர் ஆசனம் புனிதமான ஆசனம், அதில் அமர்ந்து நடுவுநிலையோடு செயல்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமைச்சர்களிடம் கேட்கப்படும் பல கேள்விக்குப் பேரவைத் தலைவர் குறுக்கிட்டு அவரே பல கேள்விக்குப் பதிலை கூறுகிறார். முதலமைச்சர், அமைச்சர் பதில் கூறும் முன்பு இடைமறித்து அவர் பேசுகிறார். இதனால், மக்கள் பிரச்னைக்குத் தீர்வு காண முடிவதில்லை. நீதிமன்றமே மூவரையும் அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என்று கூறிவிட்டது. ஆகையால், மூன்று பேரையும் எக்கட்சியும் சாராதவர்கள் என்று அறிவிக்க வேண்டும். நாங்கள் மனசாட்சிப்படி நடந்து கொள்கிறோம்.

எதிர்கட்சித் துணைத் தலைவர், எதிர்கட்சித் தலைவர் அருகில் அமர வைக்கப்படுவதே மரபு. எதிர்கட்சித் தலைவர் இல்லாதபோது எதிர்கட்சித் துணைத் தலைவர் பேசுவார். அவை சபைக்கான மரபுப்படியே நடக்க வேண்டும். கட்சியில் இருந்து மூவரையும் நீக்கியது செல்லும் என்று நீதிமன்றமே சொன்ன பிறகும், பேரவைத் தலைவர் சாக்குப் போக்கு சொல்கிறார். விவசாயிகளுக்கு நன்மை செய்யும் எண்ணம் திமுகவிற்கு கிடையாது. மயிலாடுதுறை திமுகவினர் அறைக்குள் பேசிய காணொலியை காட்டி எதிர்கட்சித் தலைவர் விமர்சனம் செய்தார்.

விவசாயிகள் மீது அக்கறை இருப்பதாக நடிக்கிறது திமுக. இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பேரவைத் தலைவர் மரபை மீறுவதாக மக்கள் பார்ப்பார்கள். கருணாநிதி சக்கர நாற்காலியில் பேரவைக்கு வந்தபோது அவர் எதிர்கட்சி தலைவராக இல்லை. அவர் ஓரமாக வந்து செல்லும் வகையில் வாய்ப்பை உருவாக்கி தந்தார் ஜெயலலிதா. ஆனால், இன்று மாற்றி பேசுகிறார்கள்” என கூறினார்.

இதையும் படிங்க:எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம்; அதிமுகவினர் வெளியேற்றம் - சபாநாயகர் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details