தமிழ்நாடு

tamil nadu

விவசாயிகளின் நலனில் திமுகவிற்கு அக்கறை இல்லை - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 8:46 AM IST

TN Farmers Protest: தமிழக விவசாயிகளின் நலனில் துளியும் அக்கறை இல்லாமலும், தொடர்ந்து விவசாயிகளை திமுக வஞ்சித்து வருகிறது என வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் போராட்ட குழு சார்பில்  ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் போராட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் போராட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை:தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் நேற்று (நவ.21) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போரட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் போராட்டக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், “விவசாயிகளின் நலனின் தொடர்ந்து அக்கறையின்றி திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மேலும், விவாசாயிகளைத் தொடர்ந்து இந்த அரசு வஞ்சித்து வருகிறது.

விவசாயிகள் என்ன குண்டர்களா? எதற்கு விவசாயிகள் மீது இந்த சட்டமானது பாய வேண்டும். மேல்மா சிப்காட் விவகாரத்தில் போராடிய அனைவர் மீதும் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று, நிபந்தனையின்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மேலும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். நியாயம் கேட்டு போராடும் விவசாயிகளை காவல்துறை மூலம் கைது செய்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகும் வரை விவசாயிகள் ஓயமாட்டோம்” என்று தெரிவித்தார்.

சிப்காட் விவகாரம்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் அலகு 3 திட்டத்தை கைவிடக் கோரியும் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மேல்மா பகுதி விவசாயிகள் தொடா்ந்து 100 நாட்களுக்கு மேலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை விரிவாக்கப் பகுதி எனப்படும் அலகு - 3 பகுதியில் அனக்காவூா் ஒன்றியம் தேத்துறை உள்வட்டத்தைச் சோ்ந்த வடஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 3,200 ஏக்கரில் விவசாய நிலங்கள் இருந்து வருகின்றன.

சிப்காட் தொழில்பேட்டைக்கு மேல்மா பகுதி விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களை கையப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேல்மா உள்ளிட்ட 9 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சார்பில் மேல்மா கூட்டுச் சாலை அருகே கடந்த ஜூலை 7-இல் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

ஆனால், இந்த போராட்டத்திற்கு, அரசுத் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இது வரை அவர்களுக்கு கிடைவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதனையெடுத்து, ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், நவம்பர் 4ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில், ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டு, வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பின்னர், விவசாயிகள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழான நடவடிக்கையை தமிழக முதல்வர் ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:புதுக்கோட்டையில் செல்வாக்கை இழக்கிறதா திமுக? 30 வருடமாக திமுகவில் இருந்தவர்கள் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details