தமிழ்நாடு

tamil nadu

பள்ளி சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை வழக்கில் போக்சோ நீதிமன்றம் புதிய ஆணை!

By

Published : Apr 27, 2023, 7:07 AM IST

உறவுக்கார சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முதியவருக்கு எதிரான வழக்கில் மேல் விசாரணை செய்ய காவல் துறைக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:லண்டனில் வசித்து வரும் சென்னையைச் சேர்ந்த தம்பதியர், தங்கள் மகளுடன் விடுமுறைக்காக கடந்த 2012ம் ஆண்டு சென்னை வந்தனர். விடுமுறை முடித்து லண்டன் திரும்பிய பின், தங்கள் குழந்தை பள்ளியில் இயல்புக்கு மாறாக நடந்துள்ளார். இதனால், சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுத்தபோது, சென்னையில் 67 வயதான தாத்தா உறவுமுறையில் உள்ள உறவினரால் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரியவந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், லண்டன் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் இந்தியாவில் நடந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகார வரம்பு இல்லை எனக் கூறி லண்டன் போலீசார் புகாரை முடித்து வைத்தனர்.

பின்னர், இந்தியா திரும்பிய சிறுமியின் பெற்றோர், சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உறவுக்கார முதியவருக்கு எதிராக புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முதியவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமிக்கு மனரீதியாக பிரச்னை இருந்துள்ளதாகவும், லண்டன் போலீசாரின் அறிக்கையின் அடிப்படையில் திருமங்கலம் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், 2014ல் நடந்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். லண்டனில் சிறுமிக்கு மனநல ஆலோசனை வழங்கியது குறித்த மருத்துவ அறிக்கை குறித்து முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னை காரணமாக அளிக்கப்பட்ட இந்த புகார் குறித்து மேல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, முதியவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரகுநாதன் ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், லண்டனில் வழக்கு தொடர்பாக உள்ள ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை பெற வேண்டியுள்ளதாகக் கூறி, வழக்கில் மேல் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். குற்ற வழக்கு புலன் விசாரணை என்பது குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கை நடத்துவதற்கு மட்டுமல்ல, உண்மையை கண்டறியவும் தான் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. நீலகிரியில் நடந்த கொடூர சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details