தமிழ்நாடு

tamil nadu

Rohini Theatre Issue: தியேட்டர் ஊழியர்கள் 2 பேர் மீது வன்கொடுமை வழக்கு - முழுப் பின்னணி!

By

Published : Mar 30, 2023, 9:18 PM IST

Updated : Mar 31, 2023, 9:31 AM IST

சென்னை ரோகிணி திரையரங்கில் சினிமா பார்க்க நரிக்குறவர் சமூக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், திரையரங்க பணியாளர்கள் இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று (மார்ச் 30) வெளியானது. இப்படத்தை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில், அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்தனர். இதேபோல் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 15 பேர் படம் பார்க்கச் சென்றனர். அப்போது டிக்கெட்டை பரிசோதனை செய்யக்கூடிய திரையரங்க ஊழியர், டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் சமூக மக்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதுதொடர்பாக திரையரங்க ஊழியருக்கும், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நரிக்குறவர் சமூக மக்களைப் படம் பார்க்க அனுமதிக்காததற்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதற்கிடையே, 'பத்து தல' திரைப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் சிறுவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், எனினும் நரிக்குறவ மக்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு படம் பார்க்க வைக்கப்பட்டதாகவும் ரோகிணி திரையரங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில், CMBT காவல்துறையினர் ரோகிணி திரையரங்கிற்கு நேரில் சென்று திரையரங்கு உரிமையாளர், டிக்கெட் பரிசோதகர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நரிக்குறவ சமூக மக்கள் மேம்பாலத்தின் கீழ் வசித்து வருவதும், சிம்பு ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு டிக்கெட்டை இலவசமாக வழங்கியதும் தெரியவந்தது. மேலும் டிக்கெட் பரிசோதகர் குமரேசன், சிறுவர்கள் இருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைந்தகரை வட்டாட்சியர் மாதவன் நேரில் சென்று, திரையரங்க உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட காவேரி என்பவர், தங்களை திரையரங்குக்குள் அனுமதிக்காதது குறித்து CMBT காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ரோகிணி திரையரங்கின் காசாளர் கோயம்பேட்டை சேர்ந்த ராமலிங்கம் (50) மற்றும் பணியாளர் குமரேசன் (36) ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோதமாக கூடுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அண்ணாநகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட உதவி ஆணையர் ரமேஷ் பாபு தலைமையில் இந்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றிய நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அடையாறு கலாஷேத்ரா பாலியல் புகார்; தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரகசிய விசாரணை

Last Updated : Mar 31, 2023, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details