தமிழ்நாடு

tamil nadu

'வீடுகள் இடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்' - நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு கண்டனம்

By

Published : May 8, 2022, 7:08 PM IST

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து முதியவர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை இடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும்; தமிழ்நாடு அரசின் இது போன்ற மக்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கண்டனம்
கண்டனம்

சென்னை:நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு கண்டன அறிக்கை ஒன்றினை இன்று (மே 8) வெளியிட்டுள்ளது.

அதில், "சென்னையின் கிரீன்வேஸ் சாலை அருகில் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் அப்பகுதி மக்களுக்கு குடிநீர், மின்சாரம், கழிவுநீர் கால்வாய் இணைப்பு மற்றும் ரேசன் கார்டு, ஆதார் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கியுள்ளன.

இந்நிலையில் அங்கே உள்ள பக்கிங்காம் கால்வாயில் பாதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பறக்கும் ரயில் நிலையமும் உள்ளது. ஆனால், கால்வாயின் அருகில் இருந்த சுமார் 366 குடியிருப்புகள் கடந்த 2015ஆம் ஆண்டு அகற்றப்பட்டது. அப்போது அதன் எதிரில் 50 அடி தூரத்தில் இருந்த இளங்கோ தெருவில் இருந்த வீடுகள் கால்வாயில் இருந்து தூரத்தில் இருந்ததால் அந்தப் பகுதிகள் அகற்றப்படாது என்று அம்மக்களுக்கு வாக்குகுறுதியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு என்றபெயரில் அங்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது உழைப்பின் மூலம் சிறுகச் சிறுக சேமித்து கட்டிய, சுமார் 259 வீடுகளை இடிக்க ஏராளமான காவல் துறையினரைக் குவித்தும், பொதுமக்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி தடுத்தும் மின் இணைப்பை துண்டித்தும் அம்மக்களை மிரட்டி வந்தனர்.

இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் அங்கு போராடிக் கொண்டிருந்த மக்களை அதிரடியாக கலைத்துவிட்டு, கடந்த ஒரு வாரமாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு வீடுகளை இடித்தும், சென்னையிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள படப்பை நாவலூருக்கு அவர்களைக் கட்டாயப்படுத்தி குடியமர்த்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (மே 8) காலை இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அப்பகுதியில் வசித்து வரும் கண்ணையன் என்ற முதியவர் " காப்பாத்து, இந்த ஊமை ஜனங்களைக் காப்பாத்து" என்று கூறி தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.

தமிழ்நாடு அரசின் இது போன்ற மக்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிப்பதுடன் வீடுகள் இடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இடித்த வீடுகளை உடனடியாக கட்டித்தர வேண்டும். பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு - நடந்தது என்ன?

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details