தமிழ்நாடு

tamil nadu

அழிவின் விளிம்பில் நிற்கும் நெட்டி கலைப்பொருட்கள்.. புவிசார் குறியீடு கிடைத்தும் புலம்பலில் கலைஞர்கள்.. அரசு செய்ய வேண்டியது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 9:09 PM IST

Updated : Aug 29, 2023, 2:42 PM IST

புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்த நெட்டி வேலைப்பாடு கலைப்பொருட்கள் அழிவின் விளிம்பில் இருக்கும் நிலையில் அதனை பாதுகாக்க தமிழக அரசு உதவ வேண்டும் என கைவினைக் கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

தஞ்சாவூர் நெட்டி கலைஞர்கள் அரசுக்கு விடுக்கும் கோரிக்கை

தஞ்சாவூர்:கலைகளின் பிறப்பிடமாக திகழ்வது தஞ்சாவூர் மாவட்டம். இயல், இசை, நாடகம், நாட்டியம் என அனைத்து கலைகளும் தஞ்சைக்கு பெருமை சேர்த்து வருகிறது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை, நாச்சியார் கோவில் பித்தளை விளக்கு ஆகியவை உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த வரிசையில் நெட்டி வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப்பொருட்களும் ஒன்றாகும்.

நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையைச் சேர்ந்தது. நெட்டி கல்கத்தா, ராஜமுந்திரி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் கிடைக்கிறது. மேலும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள குளம், ஏரி போன்றவற்றில் விளைகிறது. ஆனால் அவை வேலைப்பாட்டிற்கு உரிய பொருட்களாக இருப்பதில்லை.

இதனுடைய நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும். இந்த நெட்டி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரை கிடைக்கும். இந்த நெட்டி வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி அதில் கைவினைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் செய்யப்படுகின்றன.

மேலும், இத்தகைய நெட்டி மூலம் கோயில் அமைப்புகள், சுவாமி சிலை அமைப்புகள், இயற்கை காட்சிகள், கட்டிட அமைப்புகள் மற்றும் வாழ்த்து மடல்கள் உள்ளிட்டவைகளும் செய்யப்படுகின்றன. நெட்டியில் செய்யப்படும் கலைப் பொருள்கள் தந்தத்தில் செய்யப்பட்டவை போன்று மிகவும் வெண்மையாக, அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும். மேலும், நெட்டி வேலைப்பாட்டிற்கு புவிசார் குறியீடு அங்கீகாரமும் உண்டு.

இத்தகைய நெட்டி வேலைப்பாட்டின் சிறப்பாகத் திகழ்வது தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம் கடற்கரை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகும். மேலும், தமிழர்களின் தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய விழாவான மாட்டுப் பொங்கலின் போது, மாட்டின் அழகுக்காக பயன்படுத்தும் மாலையினைச் செய்வதற்கும் இந்த நெட்டி பயன்படுத்தப்படுகிறது.

இதன் பயன்பாடு என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்ட ஒன்று. இந்த நெட்டியின் சிறப்பம்சமே, இதனோடு வேறு எந்தப் பொருட்களையும் சேர்க்காமல் நெட்டியை மட்டுமே கொண்டு செய்யப்படுவதும், அவ்வாறு செய்யப்படும் பொருட்கள் ஆண்டுகள் பல ஆனாலும் அதன் வண்ணம் தன்மை மாறாமல் அப்படியே இருப்பதும் ஆகும்.

இயந்திரங்கள் இல்லாமல் முற்றிலும் கைவினை கலைஞர்களால் செய்யப்படும் இந்த கைவினைப் பொருட்களுக்கு அதிக வரவேற்பும், விற்பனை வாய்ப்பும் உள்ளது. தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட இந்த கைவினைக் கலைத்தொழில் அதன் தன்மையும், தனிச்சிறப்பும் மாறாமல் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்டோரால் செய்யப்பட்டு வந்தது.

ஆனால், காலப்போக்கில் அவை குறைந்துவிட்டது. இந்நிலையில், தஞ்சையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் ராதா(65), எழில்விழி (55) தம்பதியினர் சுமார் 40 ஆண்டுகாலமாக நெட்டி வேலைப்பாடு தொழிலை செய்து, கலையை பாதுகாத்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கைவினை கலைஞர் ராதா கூறும்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட பகுதியில் நெட்டி கிடைப்பதில்லை. கல்கத்தா, ராஜமுந்திரி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் இருந்து, நெட்டி வாங்கி வரப்பட்டு கலைப் பொருட்கள் செய்யப்படுகின்றன். இதனால் கூடுதல் செலவாகிறது.

மேலும் நெட்டி வேலைப்பாடு கலைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்த பிறகு அதன் விற்பனை வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. ஆனால் இந்த தொழிலை கற்றுக்கொள்ள யாரும் முன்வராத காரணத்தால் அவற்றை செய்ய முடியவில்லை. எனவே அழிவின் விளிம்பில் உள்ள இக்கலையை அரசு
பாதுகாக்க தொழில் முனைவோர்க்கு பயிற்சி வழங்க முன் வர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:Onam Festival : விழாக் கோலம் பூண்ட தோவாளை பூ மார்க்கெட்.. விடிய விடிய குவிந்த பொதுமக்கள்!

Last Updated : Aug 29, 2023, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details