தமிழ்நாடு

tamil nadu

"20% மின் கட்டண உயர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்" - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!

By

Published : Jun 25, 2023, 7:01 PM IST

ஒன்றிய அரசின் 20 விழுக்காடு மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:ஒன்றிய அரசின் 20 விழுக்காடு மின்கட்டண உயர்வு அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், மின் கட்டண உயர்வுக்கான திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நாடு முழுவதும் தொழிற்சாலை, வணிகம் மற்றும் வீடுகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது மின்சாரம் அதிகமாக பயன்படும் உச்சபட்ச நேரங்களில் மின்கட்டணம் 20 விழுக்காடு உயர்த்தப்படும் என ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. அதாவது உச்ச நேரமாக காலை 6 மணி முதல் 10 மணி வரையும், இரவு 6 மணி முதல் 10 மணி வரையும் இந்த கட்டண உயர்வு இருக்கும். இதற்காக மின்சார விதியில் 8ஏ என்ற புதிய திருத்தத்தைக் கொண்டு வந்து உத்திரவிட்டுள்ளது.

அதாவது, மின்சார விதிகளில் கொண்டு வந்துள்ள திருத்ததின்படி, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கும், 2025 ஏப்ரல் மாதம் முதல் வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. உச்சபட்ச நேரத்திற்கு ஒரு வகையான மின்சார கட்டணம், சாதாரண நேரத்திற்கு ஒரு வகையான மின்சார கட்டணம் என்பது ஏற்புடையது அல்ல. இதனால், சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

இந்தியாவின் தற்போதைய மின்நிறுவுதிறன் 2023 ஜனவரியில் 411.64 ஜிகா வாட் ஆக உள்ள நிலையில், இந்தியாவின் உச்சபட்ச தேவை என்பது 2022 டிசம்பரில் 205.03 ஜிகா வாட் ஆக தான் இருந்தது. அதாவது, மொத்த மின் உற்பத்தியில் 50 விழுக்காடு மட்டுமே உச்சபட்ச தேவையாக உள்ளது. எஞ்சிய மின் உற்பத்தியை பயன்படுத்த தேவை இல்லாத நிலையில், உச்சபட்ச நேரத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே எழவில்லை.

மேலும், பல்வேறு விதமான பணிகளுக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் பொதுவாக காலையில் சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். எனவே, காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பயன்பாடு என்பதும் அதிகமாக இருக்கும்.

சாதாரண, ஏழை, எளிய பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் நேரத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்திவிட்டு, அவர்கள் பயன்படுத்தாத நேரத்தில் மின்சார கட்டணத்தை குறைக்கிறோம் என்பது மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல் இந்த கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும்.

இந்த திருத்தத்தால் வீட்டு மின்நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் அறிவித்திருந்தாலும், மேற்கண்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை, தமிழ்நாடு அரசு நிர்ப்பந்திக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். எனவே, ஒன்றிய அரசு உச்சபட்ட நேரத்தில் அறிவித்துள்ள 20 விழுக்காடு கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மின்சார விதிகளில் செய்யப்பட்டுள்ள 8ஏ திருத்தத்தை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை வேகப்படுத்தும் திமுக..!; பின்னணி என்ன..?

ABOUT THE AUTHOR

...view details