தமிழ்நாடு

tamil nadu

எண்ணெய் கசிவுகள் ஏற்படவில்லை - மணலியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கழிவு கலந்த விவகாரத்தில் சிபிசிஎல் விளக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 11:23 AM IST

Updated : Dec 9, 2023, 12:45 PM IST

Crude oil wastage: தங்களது தரப்பில் இருந்து எண்ணெய் கசிவுகள் ஏற்படவில்லை என பசுமை தீர்ப்பாயத்தில் சிபிசிஎல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள் மழை நீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்கள் தொடர் மழை காரணமாக வெள்ளக்காடாக திகழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, ராணுவத்தினர், அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் தேவையாக அடிப்படை உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சில இடங்களில் மழை நீருடன் சாக்கடை கழிவுகளும் கலந்து வருவதால், பல்வேறு தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மீட்புப் பணிகள் அரசால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மணலியில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் நிறுவனம் எல்பிஜி, பெட்ரோல், விமான எரிபொருள் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களைச் சுத்தகரித்து, தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்கி வருகிறது. இதனிடையே இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக, சுத்திகரிப்பு நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்து, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த எண்ணெய் கழிவுகள், மழைநீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததாக புகார் எழுந்தது. இதனால் கடுமையான துர்நாற்றமும் வீசி, தொற்று ஏற்படவும் வாய்ப்பாகவும் மாறியது.

இதனால், குடியிருப்பு வாசிகள் வெளியேற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கோர்லபாடி அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கில், நேற்று நிறுவனங்களின் கச்சா எண்ணெய் கழிவு கலந்துள்ளதா, எப்படி அகற்றுவது என நிறுவனங்களின் விளக்கத்தை தெரிவிப்பதாக தெரிவித்தார். அரசுத் தரப்பில், ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (டிச.09) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிறுவனங்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், “சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்படவில்லை. வேறு ஏதாவது நிறுவனத்தில் இருந்து ஏற்பட்டிருக்கலாம். இருந்தாலும், எண்ணெய் அப்புறப்படுத்துவதற்கான உபகரணங்களைக் கொண்டு கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:மணலி பகுதியில் வெள்ள நீரில் கலந்த கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்த விவகாரம்: நாளை அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

Last Updated : Dec 9, 2023, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details