தமிழ்நாடு

tamil nadu

பாஜக பெண் நிர்வாகிகளை இழிவுபடுத்திய திமுக பேச்சாளர் மீது புகார்

By

Published : Oct 29, 2022, 4:35 PM IST

பாஜக பெண் நிர்வாகியும், நடிகையுமான குஷ்பூ, கௌதமி, காயத்திரி ரகுராம், நமீதா உள்ளிட்டோரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:திமுக சார்பில் கடந்த 26ஆம் தேதி ஆர்.கே. நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ், திமுக பேச்சாளர் சைதை சாதிக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது சைதை சாதிக், பாஜகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நடிகை குஷ்பூ, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியது தொடர்பான வீடியோ வெளியானது.

இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில் நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் இன்று (அக்.29) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில மகளிர் அணி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் நதியா சீனிவாசன், “கடந்த 26 ஆம் தேதி ஆர்.கே. நகர் பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தென்சென்னை சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் சைதை சாதிக் பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவான வார்த்தையால் இழிவுபடுத்தும் வகையில் பேசியது கண்டிக்கதக்கது.

சமுதாயத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பெண்கள் வெளியே வருகின்றனர். ஆனால் அவர்களை தொழில் சார்ந்தோ, தனிமனித தாக்குதல் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பாஜக பெண் தலைவர்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். குறிப்பாக திமுக நிர்வாகிகள் பெண்களை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

திண்டுக்கல் ஐ. லியோனி பெண்கள் இடுப்பு குறித்து பேசியதும், அமைச்சர் பெண் மேயரை மிரட்டுவதும், பெண்களை ஓசியில் பயணம் செய்வதாக கூறுவது என தொடர்ந்து பேசி வருகின்றனர். இதே போல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, அம்மா தண்ணீர் 10 ரூபாய் என தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதால் 2016 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது.

பொதுமக்கள் உங்கள் செயல்பாடுகளை கவனித்து கொண்டு வருகின்றனர். இதற்கு தேர்தலின் போது மக்கள் தக்கபதிலடி கொடுப்பார்கள் என கூறினார். மேலும் இன்றைக்கு பாஜக தான் வலுவான எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இது போன்று தனிமனித தாக்குதல் குறித்து பேசியதை கண்டித்து புகார் அளித்துள்ளோம்.

கனிமொழி வெறும் மன்னிப்பு என பதிவிட்டதை தவிர சம்மந்தப்பட்ட நபர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, திமுகவை பொறுத்தவரை கனிமொழிக்கே இந்த நிலைமை தான், திமுகவினர் தொடர்ந்து பெண்கள் குறித்து தவறாக பேசினால் மகளிர் அணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும், காவல்துறை எங்களது புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க :கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் சிக்கிய நபருக்கு பாஜக பயிற்சி ? சபாநாயகர் பரபரப்பு பேட்டி

ABOUT THE AUTHOR

...view details