தமிழ்நாடு

tamil nadu

லியோ பட வெளியீடு; அரசின் கட்டுப்பாடுகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 7:50 AM IST

leo show restriction: லியோ திரைப்படம் திரையிடுவது தொடர்பாக தமிழக அரசாணையில் விதித்த கட்டுப்பாடுகளை மீறும் திரையரங்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

leo show restriction
லியோ பட கட்டுப்பாடு: அரசாணையை மீறும் திரையரங்கு மீது நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

சென்னை:நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தை திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழக அரசு சில கட்டுப்பாட்டுகளுடன் கூடிய அரசாணையை பிறப்பித்துள்ளது.

அதில், வருகிற 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிடவும், காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகள் முடிக்கப்பட வேண்டும் எனவும் அந்த அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லியோ திரைப்படத்தை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்படம் காண வரும் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து சீராக செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்த அரசாணை தொடர்பாக கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் கண்காணிக்க வேண்டும் எனவும் அந்த அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், அரசு வகுத்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், திரையரங்கிற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் சிறந்த முறையில் அமைத்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு அனுமதி அளித்துள்ள காலை 9 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 1.30 மணிக்குள் திரைப்படத்தை முடித்துக் கொள்ள வேண்டும் எனவும், அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்காக சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் திரையரங்குகள் அதன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும், திரையரங்குகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இதையும் படிங்க: 'லியோ' சிறப்புக் காட்சி எப்போது? - புதிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

ABOUT THE AUTHOR

...view details