தமிழ்நாடு

tamil nadu

‘ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிக்கும் செயலாகும்’ - மு.க.ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம்

By

Published : Jul 9, 2023, 9:02 PM IST

தமிழ்நாடு மாநில சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி நடந்துகொண்ட விதம் மாநிலத்தின் மற்றும் அரசாங்கத்தின் நெறிமுறைகளை பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கியதாகவும், இந்தியாவின் இத்தகைய மகத்தான தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்தது, தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிக்கும் செயலாகும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு நேற்று (ஜூலை 8) கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவு செய்ய ஆர்.என். ரவி தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதை அவர் மறந்துவிட்டார். அவர் மக்களின் தலைவர் அல்ல; நியமனம் செய்யப்பட்ட ஒரு நிருவாகி. கடந்த ஜன 5ஆம் தேதியன்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் என்ற விழாவில், மீண்டும் தமிழ் மக்களையும், பண்பாட்டையும், இலக்கியத்தையும், திராவிடக் கருத்தியலையும், அரசியலையும் இழிவுபடுத்தும் வகையிலும், அவதூறாகவும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும், அவை பின்வருமாறு செய்தித்தாளில் வெளிவந்தன.

துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில், நாங்கள் திராவிடர்கள், எங்களுக்கும் இதற்கும் (பாரதம்) எந்தத் தொடர்பும் இல்லை என்ற பிற்போக்குத்தனமான அரசியல் நடந்து வருகிறது. அதனால்தான் கூட்டாட்சி பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள். மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் இங்கே இருந்தது என்பதை அவர்கள் உணரவில்லை. மாகாணங்கள் என்ற கருத்தாக்கம் நிருவாக நோக்கங்களுக்காக உள்ளது, எனவே, நமது ஒன்றியம் அமெரிக்காவைப் போலன்றி இயற்கையானது; கருத்தியல் சார்ந்தது அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

இங்கே தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான கதையாடல் உருவாக்கப்பட்டுள்ளது; நாடு முழுமைக்கும் பொருந்தும் அனைத்தையும் தமிழ்நாடு மட்டும், 'இல்லை, நாங்கள் உடன்படவில்லை' என்று சொல்லும். இது ஒரு பழக்கமாகிவிட்டது, கல்விப்புலம் உட்பட அனைத்துத் தரப்பினராலும் இந்தப் பழக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் மோசமான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளன. இது உடைக்கப்பட வேண்டும், உண்மை வெல்ல வேண்டும். நாம் அனைவரும் ஒன்று, பாரதத்தின் ஓர் அங்கம் என்பதே அந்த உண்மை.

திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆர்.என்.ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல; அது அறியாமையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுமாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலான திராவிட அரசு மற்றும் அரசியலின் விளைவாகவே, இன்றைக்கு வளர்ச்சியில் இந்திய அளவில் முதல் 3 இடங்களில் தமிழ்நாடு உள்ளது. வளர்ச்சியும், சமூகநீதியும் கைகோர்த்துச் செல்லும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள 2022ஆம் ஆண்டின் சமூக முன்னேற்றக் குறியீட்டில், தேசிய சராசரியான 60.19-க்கு எதிராக, தமிழ்நாடு 63.33 புள்ளிகளைப் பெற்றுள்ளது. திராவிட அரசியல் பிற்போக்கானதா அல்லது முற்போக்கானதா என்பதை நடுநிலையாளர்களால் இந்தத் தரவுகளைக் கொண்டு கணிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில், தொடர்ந்து திராவிட ஆட்சி நடப்பதால்தான் பொருளாதார வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது. அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரத்தில், தமிழ்நாடு 38ஆயிரத்து 837 தொழிற்சாலைகளுடன் முதலிடத்திலும், குஜராத் மாநிலம் 28ஆயிரத்து 479 தொழிற்சாலைகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளது. 2020-2021-ஆம் ஆண்டில், 13ஆயிரத்து 641 ரூபாய் கோடியாக இருந்த மின்னணு ஏற்றுமதி, கடந்த 2 ஆண்டுகளில் 223 விழுக்காடு அளவிற்கு வளர்ச்சியைப் பதிவு செய்து, 2022-2023-ஆம் ஆண்டில் 44ஆயிரத்து 44 கோடி ரூபாயாக உயர்ந்து, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

ஆர்.என். ரவி , தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை, ‘தமிழகம்’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கவியலாத அதிர்ச்சியை அளிக்கும் கருத்தைத் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்தச் செயல் தமிழ்நாட்டின்மீது அவருக்குள்ள அதீத வெறுப்பையும் காட்டுவதாக அமைந்துள்ளதோடு, திராவிடத்தின் அடையாளமும், முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் அடையாளமாகத் திகழ்பவருமான பேரறிஞர் அண்ணாவால் ‘தமிழ்நாடு’ எனச் சூட்டப்பட்ட பெயரைக் களங்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது . ஆர்.என். ரவி , தமிழர்களின் நலனுக்கு எதிரானவர் என்பதும், அவர் அறிந்த வகையில், தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது விவரிக்கமுடியாத, ஆழமாக வேரூன்றிய பகைமை கொண்டவர் என்பதும் தெளிவாகிறது.

ஆளுநர் ஆர்.என். ரவியின் மேலே விவரிக்கப்பட்ட சொற்களும், பேச்சுகளும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை செயல்படவிடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பு, அவமதிப்பு மற்றும் அதிருப்தியையும் அவர் தூண்டுகிறார் என்பதையே காட்டுகிறது. 9-1-2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தியபோது ஆர்.என். ரவியின் எதேச்சாதிகாரம் உச்சக்கட்டத்தை அடைந்தது. பிரிவு 163(1)-இன்படி, ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின்படி தனது கடமைகளைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது , ஆளுநர் தன்னிச்சையாகவோ, தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவோ செயல்பட முடியாது.

இருப்பினும், 9-1-2023 அன்று ஆர்.என்.ரவி , அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை முற்றிலுமாக மீறும் வகையில், தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, 7.1.2023 அன்று தான் ஒப்புதல் அளித்த உரைப் பகுதியை வாசிக்காமல், திருத்தப்பட்ட பதிப்பை வாசித்ததாகவும், அவருடைய அன்றைய உரையில் அவருடைய அரசியல் நோக்கம் தெளிவாகத் தெரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், வரைவு உரையில் குறிப்பிடப்பட்டிருந்த 'சமூகநீதி', 'சுயமரியாதை', 'அனைவருக்குமான வளர்ச்சி', 'சமத்துவம்', 'பெண்ணுரிமை', 'மதநல்லிணக்கம்', 'மனிதநேயம்' மற்றும் 'திராவிட மாடல் ஆட்சி' போன்ற சொற்களை அவர் வாசிக்காமல் புறக்கணித்தார் என்றும், ஒருவேளை இவற்றில் எல்லாம் ஆளுநருக்கு நம்பிக்கை இல்லை என்பதால், அவர் அவற்றைப் புறக்கணித்திருக்கலாம்.

அதோடு, 'தந்தை பெரியார்', 'அம்பேத்கர்', 'பெருந்தலைவர் காமராஜர்', 'பேரறிஞர் அண்ணா', 'முத்தமிழறிஞர் கலைஞர்' போன்ற தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதையும் ஆளுநர் தவிர்த்தார். இதன்மூலம், மாநிலத்தின் மற்றும் அரசாங்கத்தின் நெறிமுறைகளை ஆளுநர் பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கியதாகவும், இந்தியாவின் இத்தகைய மகத்தான தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்தது, தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிக்கும் செயலாகும். அதோடு, ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட வரைவு உரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில்கூட, இதுபோன்ற வாக்கியங்களைப் படிக்காமல் தவிர்த்தது அதிர்ச்சியளிக்கிறது” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ரூ.400 கோடி டிரான்ஸ்ஃபார்மர் ஊழல்: மறுப்புத் தெரிவித்த மாநில அரசுக்கு அறப்போர் இயக்கம் பதிலுரை!

ABOUT THE AUTHOR

...view details