தமிழ்நாடு

tamil nadu

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு; காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 6:19 PM IST

Updated : Sep 28, 2023, 7:02 PM IST

Tribute of MS Swaminathan: இன்று வயது மூப்பின் காரணமாக காலமான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு - தலைவர்கள் இரங்கல்

சென்னை: இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், 'பசுமை புரட்சியின் தந்தை' எனவும் அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் அவரது மகள்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக இன்று (செப்.28) காலை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல், வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதன் அவர்களை கௌரவிக்கும் விதமாக, அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல முக்கிய பிரமுகர்கள் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, வி.கே.சசிகலா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமமுக துணை பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், 'வேளாண் விவசாயிகளுக்கு மிக உதவியாக இருந்தவர், எம்.எஸ்.சுவாமிநாதன். தமிழ்நாட்டில் பிறந்து உலக அளவில் சென்றுள்ள மிகப்பெரிய விஞ்ஞானி, மனித குலத்திற்கு உணவு தட்டுப்பாடு வரக்கூடாது என்று பாடுபட்டவர்” எனக் கூறினார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு ரீதியாக உதவி செய்ய வேண்டும் என்று தரமணியில் 2 ஏக்கர் நிலம் அவர் கேட்காத நிலையிலும் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, “பசிப்பிணி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன், உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார். சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை சுவாமிநாதன் அவர் பெற்றுள்ளார்” என தனது இரங்கலையும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: கும்பகோணம் நேட்டிவ் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் இரங்கல்!

Last Updated : Sep 28, 2023, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details