தமிழ்நாடு

tamil nadu

கிளைச்செயலாளர் முதல் முதலமைச்சர் வரை: எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை

By

Published : Feb 24, 2021, 4:43 PM IST

Updated : Feb 25, 2021, 11:01 AM IST

அதிமுக கிளைச் செயலாளர், மாவட்ட கழகச் செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர், முதலமைச்சர் எனப் பல்வேறு பதவிகள் வகித்த எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

CM Edappadi Palaniswami Profile
CM Edappadi Palaniswami Profile

அதிமுக கிளைச்செயலாளர், மாவட்ட கழகச்செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர் எனப் பல்வேறு பதவிகள் வகித்த எடப்பாடி பழனிசாமிக்கு, 2017ஆம் ஆண்டு திடீர் யோகம் அடித்தது. ஆம், யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஜாக்பாட்டாக அவருக்கு கிடைத்தது முதலமைச்சர் பதவி.

எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்காது என எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில், அதனை புறம் தள்ளி முதலமைச்சர் நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார், பழனிசாமி.

அதிமுகவையும் வழிநடத்தி, சட்டப்பேரவைத் தேர்தலையும் சந்திக்கப் போகும் எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் கடந்த 1954ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.

கடந்த 1974ஆம் ஆண்டு அதிமுக கிளைச்செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், முதல்முறையாக 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில், எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேலம் வடக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர், சேலம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்றார், எடப்பாடி பழனிசாமி,

ஜெயலலிதாவுடன் எடப்பாடி பழனிசாமி

பின்னர் 1998ஆம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து 2011ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று, ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம்பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் பதவி கிடைத்தது. அவர் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

அதிமுகவினரின் புகார்கள், கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன் உள்ளிட்டோரை கொண்ட ஐவர் அணியை ஜெயலலிதா அமைத்தார். முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்க அமைப்பாக பார்க்கப்பட்ட இந்த ஐவர் அணியில் எடப்பாடி பழனிசாமிக்கும் இடம் கிடைத்தது. முதல்வருக்கு அடுத்த இடத்தில் இவர்கள் அதிகார மையமாக வலம் வந்தனர். இதனால் ஐவர் அணி மீது புகார்கள் பறந்தன. இதனால் ஜெயலலிதா கோபம் அடைந்தார். பின்னர் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்டோரின் இல்லங்களில் ரெய்டு நடைபெற்றது.

இதன்பின்னர் நால்வர் அணியை அமைத்தார் ஜெயலலிதா. ஐவர் அணியில் இருந்த ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோருக்கு கல்தா கொடுக்கப்பட்டு, வைத்திலிங்கம், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி நியமிக்கப்பட்டனர். இந்த அணியிலும் எடப்பாடி பழனிசாமிக்கு இடம் கிடைத்தது.

CM Edappadi Palaniswami Profile

2016ஆம் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்திய நேரத்தில் சசிகலா ஆதரவாளராக செயல்பட்டார், எடப்பாடி பழனிசாமி.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு தண்டனை கிடைத்தது. இதனையடுத்து சிறை சென்றார், சசிகலா. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி யோகம் அடித்தது.

சசிகலாவுடன் எடப்பாடி பழனிசாமி

அதிமுக கட்சி உடையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்காது என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தன. ஆனால், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத அவர், அரசை வழி நடத்திச் செல்வதில் தனது கவனத்தைச் செலுத்தினார்.

அரசு அதிகாரிகளுடன் சுமுகமான அணுகுமுறை, மக்கள் நலத்திட்டங்கள், தொடக்க விழா, பல்வேறு பணிகளுக்கு அடிக்கல், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி என தன்னை எப்போதும் பிஸியாகவே காட்டிக்கொண்டார், எடப்பாடி. மாநில அரசு சிறப்பாக இயங்க மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டார்.

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி

அதேபோல் ஜெயலலிதா இருந்தவரை கட்டுக்கோப்பாக இருந்த அதிமுக, அவரது மறைவுக்குப் பிறகு உடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துடன் இணைந்து கட்சிக்காரர்களை அரவணைத்து கட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளப்போகிறார், எடப்பாடி பழனிசாமி.

இதையும் படிங்க: 'பதவிக்காக யாரிடமும் கையேந்த மாட்டேன்' - நாஞ்சில் சம்பத் உடன் சிறப்பு நேர்காணல்!

Last Updated :Feb 25, 2021, 11:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details