தமிழ்நாடு

tamil nadu

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வீட்டுமனை வழங்கிய முதலமைச்சர்!

By

Published : Jun 30, 2023, 8:53 PM IST

அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமான சிறுமி டானியாவுக்கு திருவள்ளூர் மாவட்டம், பாக்கம் கிராமத்தில் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

c m stalin
வீட்டுமனை

முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு வீட்டுமனை வழங்கினார் முதல்வர்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மோரை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கியம் தம்பதியின் 9 வயது மகள் டானியா. இவர், அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். ஆறு ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகள் ஏறி பல சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது.

இதை தொடர்ந்து சிகிச்சை அளித்திட அச்சிறுமியின் பெற்றோரிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால் மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி கோரிய நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசர் மேற்பார்வையில் சிறுமி டானியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் பின் சிறுமியின் முகம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. முதல் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் 2022 ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன்பின் மருத்துவரின் பரிந்துரையின்படி சிறுமியின் முகம், வாய், தொண்டை குழாய் பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன்படி இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்காக தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜனவரி 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் வாயிலாக சிறுமியிடம் நலம் விசாரித்தார்.

அதன்பின் ஜனவரி 11ஆம் தேதி மருத்துவர்கள் 2ஆம் கட்ட அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் 2023 பிப்.8 ஆம் தேதியன்று இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அச்சிறுமியை சந்தித்து நலம் விசாரித்து தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்க்கீஸ் ஆகியோர் நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமான சிறுமி டானியாவுக்கு திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டாவை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வின்போது சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசர் மற்றும் சிறுமி டானியாவின் பெற்றோர்கள் இருந்தனர்.

இதையும் படிங்க:குதிரை மீது கொடூர தாக்குதல்; நெல்லையில் நடந்த வெறிச்செயல்!

ABOUT THE AUTHOR

...view details