தமிழ்நாடு

tamil nadu

உடல் நலப்பிரச்சனை தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 6:03 PM IST

Chief Minister Stalin: சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த அயலகத் தமிழர் தினவிழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியைப் படித்த உடன் சிரிப்பு வந்ததாகவும், எனக்கு மக்களைப் பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர, என்னைப் பற்றி இருந்தது இல்லை எனத் தெரிவித்தார்.

Chief Minister m k Stalin speech at tamil diaspora day
முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை:தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் மூன்றாவது ஆண்டாக அயலகத் தமிழர் தின விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தகமையத்தில் நேற்று (ஜன.11) துவங்கியது. ‘தமிழ் வெல்லும்’ கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் தினவிழாவில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட பல்துறையினரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் நான் வெளிநாடுகளுக்கு வருகின்றபோது நீங்கள் எப்படி மிக பிரமாண்டமாக வரவேற்பு கொடுப்பீர்களோ, அதேமாதிரி, ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மூன்றாவது முறையாக இந்த அயலகத் தமிழர் நாளில் உங்கள் தாய் மண்ணுக்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி!

எனக்கு உடல் நலமில்லை. உற்சாகமாக இல்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. எனக்கு என்ன குறை? தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றபோது, அதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?

நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். சென்னையை சேர்ந்த ஒரு சகோதரி பேசுகிறார்கள், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் 1,000 ரூபாய் வந்துவிட்டது. பொங்கல் பரிசாக 1,000 ரூபாய் வந்துவிட்டது. அரிசி, சர்க்கரை, கரும்பு வந்துவிட்டது. வெள்ள நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது. ஒரு மாதத்தில் முதலமைச்சரே 8 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டார். பொங்கலுக்கு, யாரையும் நான் எதிர்பார்க்கத் தேவையில்லை” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் அந்த சகோதரி. அவர் முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாக மருந்து!

எனக்கு மக்களைப் பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர, என்னைப் பற்றி இருந்தது இல்லை. எந்த சூழலிலும், மக்களோடு இருப்பவன் நான். என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இதுமாதிரியான செய்திகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உழைத்துக் கொண்டே இருப்பேன்.

அண்மையில், இதே அரங்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு என்பது, தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்றால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்த சென்ற தமிழர்களை கொண்டாடும் மாநாடு. இந்த மாநாட்டுக்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் இங்கு வருகை தந்திருப்பது. அவர் உலகப் புகழ்பெற்ற தமிழன் மட்டுமல்ல, உலகமே கவனிக்கின்ற பதவியில் இருக்கும் தமிழன்.

நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது நான் தங்கிய இடத்திற்கே வந்து, எனக்கு சிறப்பு செய்தார். நேற்று அவரை என்னுடைய வீட்டிற்கே வரவழைத்து மகிழ்ந்தேன். அவரை இன்றும், என்றும் வாழ்த்தி வரவேற்கிறேன். அவரை போலவே, இந்த மேடையில், உலகமெங்கும் பல நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு பொறுப்புகளில், அறிவால், ஆற்றலால் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக அமர்ந்திருக்கும் அனைவரையும் நான் உள்ளபடியே வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்.

அனைவரது வருகைக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். மேடையிலும், நேரிலும் அமர்ந்திருக்கும், உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற உழைப்புத் திறன்தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழக் காரணம்! இப்படி புலம்பெயர்ந்த நம் தமிழ்ச் சொந்தங்கள், அந்த நாடுகளுடைய வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் முதுகெலும்பாக இருந்து வருகிறார்கள்.

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் 2010ஆம் ஆண்டு வெளிநாடுவாழ் தமிழர்களுடைய துயரங்களைக் களைய ‘வெளிநாடுவாழ் தமிழர் நலப்பிரிவு’ உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டதோடு, வாரியம் அமைக்கவும் சட்டமுன்வடிவு உருவாக்கப்பட்டது.

ஆனால், தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றம் காரணமாக, இந்த முயற்சிகளில் தடை ஏற்பட்டது. ஆனால், இப்போது அமைந்திருக்கின்ற நம்முடைய திராவிட மாடல் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னபடியே, அயலகத் தமிழர் நலனுக்கென்று தனியாக ஒரு துறையை உருவாக்கி, தனி அமைச்சரையும் நியமித்து, உங்களுடைய அவசரத் தேவைகள் உடனுக்குடன் சிறப்பான முறையில் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு: மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details