தமிழ்நாடு

tamil nadu

வாட்ஸ்அப் மூலம் நூதன முறையில் பண மோசடி செய்யும் கும்பல் - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

By

Published : Jul 23, 2023, 7:28 PM IST

சென்னையில் மோசடி கும்பல் ஒன்று, இளைஞரிடம் வெளிநாட்டில் உள்ள உறவினர் போலவே வாட்ஸ்அப் காலில் பேசி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் பறித்துள்ளது. இது போன்ற வாட்ஸ்அப் வாயிலான மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

whatsappdp
வாட்ஸ்அப்

சென்னை:சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு நூதன முறைகளில் சைபர் குற்றவாளிகள் பல்வேறு மோசடிகளை செய்து வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களிடமும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக காணப்படும் தற்போதைய சூழலில், அந்த சமூக ஊடகங்கள் வாயிலாகவே அதிக அளவு சைபர் மோசடிகள் நடக்கின்றன.

முகநூலில் போலியாக கணக்கு தொடங்கி மோசடி செய்வது, டெலிகிராமில் ஆபாசமாக போட்டோக்களை எடுத்து விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடந்து வருகின்றன. அதேபோல், ஒருவரது வாட்ஸ்அப் புரொஃபைல் படத்தைத் திருடி, அதை வைத்து அவர்களது நண்பர்கள், உறவினர்களிடம் பண மோசடி செய்வது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன.

இதேபோன்ற ஒரு வாட்ஸ்அப் மோசடி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது உறவினர் வாட்ஸ்அப் காலில் பேசி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கேட்டதாகவும், அதனை நம்பி அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்குப் பணத்தை செலுத்தி ஏமாந்துவிட்டதாகவும் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

குறிப்பாக மோசடிக்காரர்கள் தனது உறவினரின் குரலில் பேசியதாகவும், அதனால் தான் நம்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிறருக்கு தெரியாமல் உதவி கேட்பதால், யாரிடமும் இது குறித்து தெரிவிக்க வேண்டாம் என்றும் உறவினரின் குரலில், கண்டுபிடிக்க முடியாத வகையில் மோசடி கும்பல் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இந்த கும்பல் அமெரிக்காவிலிருந்து பேசுவது போலவே கால நேரங்களையும் சரியாக கணித்து வைத்து, விடியற்காலையில் வாட்ஸ்அப் கால் மூலமாக பேசி இந்த மோசடியை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.

அவர்கள் பயன்படுத்திய எண், இசிம் ஆகிய எண்கள் தொடர்பாக விசாரணை செய்தபோது, போலி ஆவணங்கள் மூலம் இவற்றை வாங்கியதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் சைபர் கிரைம் போலீசார், மோசடி கும்பலைத் தேடி வருகின்றனர். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் வாட்ஸ்அப் கால் மூலம் திடீரென உதவி கேட்டால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மூதாட்டிகளை குறிவைத்து நூதன திருட்டு; திருடிய தொகையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details