தமிழ்நாடு

tamil nadu

துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்ட சென்னை வாக்கு எண்ணும் மையங்கள்

By

Published : Apr 7, 2021, 1:09 PM IST

Updated : Apr 7, 2021, 1:16 PM IST

சென்னையில் உள்ள மூன்று வாக்கு என்ணும் மையங்களும் முழுவதுமாக துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Chennai vote counting centers brought under paramilitary
Chennai vote counting centers brought under paramilitary

சென்னை:சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்.06) ஒரே கட்டமாக முடிவடைந்த நிலையில், சென்னையின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை, துப்பாக்கி ஏந்திய காவல்துறையின் பாதுகாப்புடன் மொபைல் யூனிட் மூலம் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைகழகம் ஆகிய வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பத்திரமாக பூட்டி, சீல் வைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடையவுள்ள நிலையில், மூன்று மையங்களும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாக கொண்டுவரப்பட்டுள்ளன. மூன்று மையங்களுக்கும் துணை ராணுவத்தினர் உள்பட மூன்றாயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு மையத்திலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல் அடுக்கில் துணை ராணுவத்தினரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் ஆயுதப்படையினரும், மூன்றாம் அடுக்கில் உள்ளூர் காவல் துறையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக ஏழு கம்பெனி துணை ராணுவத்தினர் மூன்று வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்படும் அறைகள் முழுவதுமாக சிசிடிவி கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மூன்று மையங்களிலும் சேர்த்து சுமார் இரண்டாயிரம் சிசிடிவி கேமராக்கள் அறைகளின் உள்ளேயும் வெளியேயும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இந்தக் காட்சிகளை காவல் துறையினரும் முகவர்களும் காண்பதற்கு தேர்தல் ஆணையம் மூலம் எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அறையும் பூட்டி சீல் வைக்கப்பட்ட பின் அந்தச் சாவியானது தேர்தல் வழிகாட்டு நெறிமுறைப்படி துணை ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் காவல் துறையினருக்கு கூட அந்த அறைகளின் அருகே செல்ல அனுமதி மறுக்கப்படும். மேலும், ஒவ்வொரு மையத்தின் நுழைவு வாயிலிலும் உள்ளூர் காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்ட உரிய அடையாள அட்டை உடையவர்கள் மட்டுமே மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், தேர்தல் வாக்கு எண்ணும் நாள் நெருங்கும் வேளையில் தற்போதுள்ள பாதுகாப்பை இரட்டிப்பாக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated :Apr 7, 2021, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details