தமிழ்நாடு

tamil nadu

தென்மாவட்டங்களில் அதிகனமழை எதிரொலி... அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடம் மாற்றம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 3:02 PM IST

Ananthapuri Express train Route Changed: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், பழனி வழியாக வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடம் மாற்றம்
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடம் மாற்றம்

சென்னை:குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணத்தால், வரும் 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் எனவும், குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த டிச.16 ஆம் தேதி முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து மழை பெய்து வரும் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நான்கு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் இன்று (டிச.18) ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை - சென்னை இடையே செல்லும் வந்தே பாரத் ரயில், திருச்சி திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை - திருச்செந்தூர் ரயில், திருச்செந்தூர் - பாலக்காடு செல்லும் ரயில், நெல்லை - ஜாம் நகர் செல்லும் ரயில்கள் இரத்து செய்யப்பட்டு உள்ளன.

நிஜாமுதீன் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் விரைவு ரயில்கள், கோவில்பட்டியில் நிறுத்தப்படுவதாகவும், சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில், விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதாகவும், தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் கொடை ரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக வழக்கமான பாதையில் சென்று வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நான்கு மணி நேர தாமதமாக, பழனி வழியாக உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில்களும் பழனி வழியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பாலக்காடு முதல் திருச்செந்தூர் செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், திருநெல்வேலியுடன் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அதி கனமழை எதிரொலி: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து!

ABOUT THE AUTHOR

...view details