தமிழ்நாடு

tamil nadu

பாஜகவினர் புதிய கொடி கம்பம் அமைக்க சென்னை போலீசார் அனுமதி மறுப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 8:55 PM IST

BJP New Pole in Tamil Nadu: சென்னை மாநகராட்சியின் உரிய அனுமதி பெறாமல் பாஜகவினர் கொடிக் கம்பங்கள் வைப்பதற்காக காவல் நிலையங்களில் அனுமதி கடிதம் கொடுத்துள்ளதாக கூறி பாஜகவினர் கொடிக் கம்பங்கள் வைக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

பாஜக கொடிக் கம்பம் விவகாரம்
பாஜக கொடிக் கம்பம் விவகாரம்

சென்னை:தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பனையூர் வீட்டின் முன்பாக சில நாட்களுக்கு முன்பு 45 அடியுள்ள பாஜக கொடிக் கம்பம் ஒன்று நடப்பட்டது. அந்த கொடி கம்பம் வைப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் பாஜகவினர் வைத்தாக கூறி அதை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் போலீசாருடன் சென்றனர்.

அப்போது பாஜக தொண்டர்கள் போலீசார் உடன் தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உட்பட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில், ”நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் 100 கொடிக் கம்பங்கள் வைக்கப்படும் எனவும், 100 நாட்களில் பத்தாயிரம் கொடிக்கம்பங்கள் வைக்கப்படும்” என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நவம்பர் 1ஆம் தேதி என்பதால் சென்னையில் வில்லிவாக்கம், ஐ.சி.எப், கிண்டி, அடையாறு என பல்வேறு இடங்களில் பாஜகவினர் கொடிக் கம்பங்கள் வைப்பதற்காக காவல் நிலையங்களில் அனுமதி பெறுவதற்காக கடிதங்கள் கொடுத்தனர். அந்த கடிதங்களில் மாநகராட்சியின் உரிய அனுமதி பெறாமல் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜகவினர் கொடிக் கம்பங்கள் வைப்பதற்கு போலீசார் அனுமதியை மறுத்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே பல்வேறு கட்சியினர் கொடிக் கம்பங்கள் வைத்துள்ள இடங்களிலும் பாஜகவினர் கொடி கம்பங்கள் வைப்பதற்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்த நிலையில் பாஜகவினர் அத்துமீறி கொடிக் கம்பங்கள் வைத்தால், மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் கொடிக் கம்பங்கள் அகற்றப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரேக் பிடிக்காத அரசு பேருந்தை சாலையின் நடுவில் உள்ள தடுப்பின் மீது மோதி நிறுத்திய ஓட்டுநர்!

ABOUT THE AUTHOR

...view details