தமிழ்நாடு

tamil nadu

சென்னை - லண்டன் நேரடி விமான சேவை ஒரு வாரமாக நிறுத்தம்; பயணிகள் அவதி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 6:16 PM IST

லண்டன் - சென்னை - லண்டன் இடையே இயக்கப்பட்டு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரமாக இயக்கப்படாததால் சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோப்புபடம்
கோப்புபடம்

சென்னை:லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமான நிறுவனம், சென்னையிலிருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை தினமும் வழங்கி வருகிறது. இந்த விமானம் தினமும் அதிகாலை 3.15 மணிக்கு லண்டனில் இருந்து சென்னை வந்து, மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் செல்லும்.

சென்னை - லண்டன் இடையே நேரடி விமான சேவை என்பதாலும், மேலும் லண்டனில் இருந்து ஸ்காட்லாந்து, ரோம், பாரிஸ், நியூயார்க், வாஷிங்டன், சிக்காகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் இருப்பதாலும், சென்னை - லண்டன் மற்றும் லண்டன் - சென்னை இடையே இயக்கப்படும் தினசரி விமானத்தில், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தது.

ஆனால், கடந்த ஒரு வாரமாக இந்த விமானம் இயக்கப்படவில்லை. இதனால் சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய விமான பயணிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர். அவர்கள் தற்போது துபாய், கத்தார், அபுதாபி, ஃபிராங்க்பர்ட் வழியாக லண்டன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடியாக செல்லாமல் மாற்று வழியில் இணைப்பு விமானங்கள் மூலம் செல்வதால் பயணிகளுக்கு பயண நேரம் அதிகரிப்பதோடு, அதிகமான செலவு உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால், சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவை மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமையகமான லண்டனில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் இயக்கப்பட்டு வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஓரிரு தினங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு சென்னை - லண்டன் - சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், மீண்டும் வழக்கம்போல் இயங்கத் தொடங்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் 3 நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை!

ABOUT THE AUTHOR

...view details