தமிழ்நாடு

tamil nadu

'தொழுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : Dec 15, 2021, 10:09 PM IST

சென்னை மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னை மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச.15) வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "தொழுநோய் ‘மைக்கோபாக்டீரியம் லெப்ரே’ எனும் பாக்டீரியாவால் காற்றின் மூலம் பரவும் நோய். தோலில் ஏற்படும் உணர்ச்சியற்ற வெளிர்ந்த சிவந்த தோல் தொழுநோயின் ஆரம்ப அறிகுறி.

ஆரம்ப நிலை கூட்டுமருந்து சிகிச்சை கண், கை, கால்களில் ஏற்படும் ஊனத்தை தடுக்கும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கூட்டுமருந்து சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

1983இல் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுமருந்து சிகிச்சையால் தொழுநோய் பாதிப்பு இந்தியாவில் 10 ஆயிரம் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுக்கு கீழ் குறைந்தது. சென்னை மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு 0.05 என தொழுநோய் பாதிப்பு விகிதம் உள்ளது. தேசிய தொழுநோய் கட்டுப்பாடு திட்டம் தொடங்கப்பட்டு டாப்சோன் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் சுற்றுப்புற இடங்களில் வசிப்பவர்களுக்கு நோய் கண்டுபிடிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. தொழுநோயால் பாதித்தவர்களின் குடும்ப நபர்கள் மற்றும் அருகில் வசிப்போருக்கு நோய் வராமல் தடுக்கும் விதமாக ரிபாம்சின் மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்திர பராமரிப்பு உதவித்தொகையும், 150 நபர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்படுகிறது. சிறப்பு தோல் நோய் சிகிச்சை முகாம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை செய்யப்படும்.

சென்னை மாவட்டத்தில் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்கள்

  • 2018-19 - 394 பேர்
  • 2019-20 - 315 பேர்
  • 2020-21 - 65 பேர்
  • 2021-22 - 49 பேர்

குழந்தைகள் பாதிப்பு

  • 2018-19 - 104 பேர்
  • 2019-20 - 78 பேர்
  • 2020-21 - 2 பேர்
  • 2021-22 - 5 பேர்

தொழுநோய் பாதிக்கப்பட்ட பெண்கள்

  • 2020-21 - 18 பேர்
  • 2021-22 - 13 பேர். தொழுநோயால் மாற்றுத் திறனாளிகள் ஏற்பட்டோர் 2018-19இல் 21 பேர், 2019-20இல் 6 பேர், 2020-21இல் ஒருவர் , 2021-22இல் ஒருவர் ஆவர்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர நோய் கண்டறிதல் மற்றும் தொடர் கண்காணிக்கப்படுகிறது. இப்பணிகளில் 685 முன்களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பகுதிகளில் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

குடிசை பகுதிகள், வணிக வளாகங்கள், கட்டுமான தொழிலாளர்களின் பணியிடங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தீவிர தொழுநோய் கண்டறிதல் முகாம் நடத்தப்படுகிறது. ஊனத்தடுப்பு முகாம் வாரந்தோறும் நடத்தப்படுகிறது. அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம்: தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details