தமிழ்நாடு

tamil nadu

'அண்ணாத்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை' - உயர் நீதிமன்றம்

By

Published : Oct 29, 2021, 12:18 PM IST

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாத்த
அண்ணாத்த

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம் தீபாவளியன்று வெளியாகிறது. இதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அண்ணாத்த படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கக் கோரி, சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், "அண்ணாத்த படத்தை இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட வாய்ப்புள்ளன. இதுபோன்று படத்தை வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும். அதனால் சட்ட விரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (அக்.29) விசாரணைக்கு வந்தது. அப்போது சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் சினேகா ஆஜராகி, சட்டவிரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் அண்ணாத்த படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க:இது தலைவர் திருவிழா: 'அண்ணாத்த' ட்ரெய்லர் பார்த்த மகிழ்ச்சியில் தனுஷ்

ABOUT THE AUTHOR

...view details