தமிழ்நாடு

tamil nadu

மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பில் 'எம்ஜிஆர்' பாட்டு பாடியதால் சலசலப்பு!

By

Published : Mar 2, 2022, 7:34 PM IST

சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வார்டு உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகளும் அதேபோல கட்சிக்கு ஏற்றவாறு உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பில் ’எம்ஜிஆர்’ பாட்டு பாடியதால் சலசலப்பு..!
மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பில் ’எம்ஜிஆர்’ பாட்டு பாடியதால் சலசலப்பு..!

சென்னை:சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வார்டு உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் பல சுவாரசியமான நிகழ்வுகளும் அதேபோல கட்சிக்கு ஏற்றவாறு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

அவரவர் கட்சிக்கு ஏற்ப பதவியேற்பு

குடும்ப உறுப்பினர்கள் முதல் குலதெய்வம் வரை நன்றி என தெரிவித்து வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். நான் தினமும் வணங்கும் தில்லை அம்பளத்தான் மற்றும் அரங்கனுக்கும் கோடி நமஸ்காரம் என்றும் தெய்வ அனுகிரகத்தால் வெற்றி பெற்றேன் என 134ஆவது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் பதவி எற்றார்.

சென்னை மாநகராட்சி 123ஆவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி மோகன் 'சோசலிசம் ஓங்குக' எனப் பதவி ஏற்றார். 111ஆவது வார்டு திமுக உறுப்பினர் நந்தினி, மாமனார் மீது ஆணை என பதவி ஏற்றுக்கொண்டார். 'புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க, பெரியார் வாழ்க, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க, எழுச்சித்தமிழர் திருமா வாழ்க, ஜெய் பீம்' என 107ஆவது வார்டு உறுப்பினர் கிரண் ஷர்மிலி (விசிக) பதவியேற்றார்.

'ஓம் நமச்சிவாய' எனப் பதவி ஏற்பை முடிக்கும்போது குறிப்பிட்டார், திமுக 104ஆவது வார்டு உறுப்பினர் செம்மொழி. 'சிந்தனைச்சிற்பி சிங்கார வேலர் நாமம் வாழ்க' என 21 வயது 98ஆவது வார்டு மாமன்ற சிபிஎம் உறுப்பினர் பிரியதர்ஷினி பதவிஏற்றார். 'கை கைவிட்டது. ஆனால், மக்கள் கைவிடாமல் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். வாக்கு அளித்த மக்கள், சகோதர சகோதரிகளுக்கு நன்றி' எனத் தெரிவித்து பதவி ஏற்றார், 92ஆவது வார்டு சுயேச்சை உறுப்பினர் திலகர்.

வாழ்க திராவிட மாடல்!

'அம்பேத்கர்,காரல் மார்க்ஸ் , இரட்டைமலை சீனிவாசன் , அயோத்திதாசர் , முன்னாள் மேயர் சிவராசு உள்ளிட்டோர் பெயரை நினைவுகூர்ந்து உறுதியேற்பதாக' விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் அம்பேத் வளவன் எனும் குமாரசாமி உறுதியேற்றார். 'கண் கலங்கி' பதவி ஏற்றார்,
வார்டு 59ஆவது உறுப்பினர் சரஸ்வதி.

'வெல்க பொதுவுடைமைக்கொள்கை. வெல்க திராவிட மாடல், வாழ்க ஸ்டாலின் ஐயா, வாழ்க விடுதலைப் போராட்ட வீரர் நல்லகண்ணு' என பதவி ஏற்றுக்கொண்டார், சிபிஐ வார்டு 42ஆவது உறுப்பினர் ரேணுகா.

'தளபதி ஐயா... வாழ்க..!, ஸ்டாலின் ஐயா வாழ்க..!' என 2ஆவது வார்டு கோமதி என்கிற சுயேச்சை உறுப்பினர் பதவி ஏற்றுக்கொண்டார். ’அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பைத் தொடங்கியுள்ள முதலமைச்சருக்கு நன்றி’ தெரிவித்து 128ஆவது மாமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா ( திமுக) பதவி ஏற்றார்.

பாட்டுப்பாடி பதவியேற்ற அதிமுக உறுப்பினர்

'பதவி வரும்போது பணிவு வர வேண்டும்' என்னும் எம்ஜிஆர் நடித்த சினிமா பாடலைப் பாடி 193ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி பதவி ஏற்றார். அப்போது, 'கச்சேரி நிகழ்ச்சியா இது..?' என திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் 'நீங்கள் பேசியதை நான் பாடினேன். அவ்வளவுதான்' என அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி பதிலளித்தார்.

இதையும் படிங்க:கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா: முதலமைச்சர் ஸ்டாலின் பெயரைக்கூறி பொறுப்பேற்பு

ABOUT THE AUTHOR

...view details