தமிழ்நாடு

tamil nadu

நாளொன்றுக்கு 910 நாய்களுக்கு தடுப்பூசி போட முடிவு - சென்னை மாநகராட்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 9:27 PM IST

சென்னை மாநகரில் தெருநாய்களின் அபாயம் அதிகரித்து வரும் நிலையை கட்டுப்படுத்த, நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 910 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 910 நாய்களுக்கு தடுப்பூசி போட முடிவு
சென்னை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 910 நாய்களுக்கு தடுப்பூசி போட முடிவு

சென்னை: பொதுமக்கள் மத்தியில் தெரு நாய்க்களின் அபாயத்தை குறைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 21ஆம் தேதி அன்று தெருநாய் ஒன்று 25 பேருக்கு மேற்பட்டவர்களை கடித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அந்த நாயை அடித்து கொன்றனர்.

நாய் கடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து இறந்த நாயின் உடலை மீட்ட சென்னை மாநகராட்சி உடற்கூராய்விற்காக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தததில், அந்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த நாய் கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு 5 டோஸ் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இதைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, மாநகராட்சி முழுவதும் தெரு நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இணக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து வருகின்றன.

இந்நிலையில், தற்போது கூடுதல் நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி 1 முதல் 15 வரை அனைத்து மண்டலங்களிலும் தெருக்களிலுள்ள நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னை நகரை வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரமாகவ உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை, கால்நடை மருத்துவப்பிரிவு சார்பில் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை செயல்படுத்தும் தீர்மாணம் விரைவில் கொண்டு வரப்படுகிறது.

மேலும் தற்போது, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் படி, நாய்களுக்கு ஏற்படும் வெறிநாய்க்கடி நோயினை முற்றிலும் தடுப்பதற்கு அதற்கான தடுப்பூசியினை அனைத்து நாய்களுக்கும் செலுத்த வேண்டும் என்ற பரிந்துரையின் கீழ் நடத்தப்படவுள்ளது. 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில், மொத்தம் 57ஆயிரத்து 366 தெரு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகபுற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் திட்டத்தின் கீழ் 68ஆயிரத்து 577 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி கொண்டு வரப்படும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு கால்நடை மருத்துவர், தெரு நாய்களை பிடிக்க தேவைப்படும் நான்கு நாய் பிடிக்கும் பணியாளர்கள், உதவியாளர்கள் இருவர், ஒரு வாடகை வாகனம் மற்றும் ஓட்டுனர் தேவைப்படுகின்றனர்.

இத்திட்டத்தில் தெரு நாய்களை அவை வசிக்கும் தெருக்களுக்குச் சென்று நாய்பிடிக்கும் பணியாளர்கள் வலைகளைக் கொண்டு பிடித்த பின்னர், கால்நடை மருத்துவரால் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தியவுடன் வண்ண சாயம் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு அவை அதே இடத்திலேயே விடுவிக்கப்படும்.

நாய்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 10% உயர்ந்து இருக்க வாய்ப்புள்ளது என்ற நிலையில், மூன்று வருடத்திற்கு 30% உயர்ந்திருக்கும் பட்சத்தில் தற்போது 93 ஆயிரம் எண்ணிக்கையிலான நாய்கள் இருப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் 7 குழுக்களாக பிரிந்து ஒவ்வொறு குழுவும் நாள் ஒன்றுக்கு தோராயமாக 130 தெருநாய்கள் என மொத்தமாக நாள் ஒன்றுக்கு தோராயமாக 910 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:அமெரிக்காவில் மீட்கப்பட்ட ராஜராஜ சோழனின் பாட்டி வழங்கிய நடராஜர் சிலை..! மக்கள் தரிசனத்திற்காக சிவபுரம் கோயிலுக்கு வருகை!

ABOUT THE AUTHOR

...view details