தமிழ்நாடு

tamil nadu

நடிகை மாயாவின் மகன் மரணம் முதல் ஏர்போர்ட் பயணிகள் பதற்றம் வரை சென்னை குற்றச் செய்திகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 8:18 PM IST

Chennai crime news: சென்னையில் நேற்று ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட கருக்கா வினோத் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் செய்தியைத் தொடர்ந்து சென்னை மாநகரின் இன்றைய (அக்.26) முக்கிய குற்றச் சம்பவங்களை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னையில் இன்றைய குற்றச் செய்திகள்
சென்னையில் இன்றைய குற்றச் செய்திகள்

சென்னை: ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான கருக்கா வினோத்தின் குடும்பத்தினரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று(அக்.25) பிற்பகல் மறைத்துக் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசியதில், ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பிருந்த இரும்புத் தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி தீப்பற்றியது.

இதனையடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்தப் போது, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. தொடர்ந்து அவர் மறைத்து வைத்திருந்த 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்கு உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தின் போது, அவர் யார் யாரோடு தொடர்பில் இருந்தார், இந்தச் சம்பவத்திற்கான காரணம் என்ன, மேலும் வேறு ஏதெனும் காரணங்கள் இருக்கிறதா என்று பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் கிண்டி காவல் துறையினர்.

இந்நிலையில் ராஜ் பவன் தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை என்றும், நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே உண்மை மறைக்கப்படுகிறது என்றும் காவல் துறை மீது ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டி உள்ளது. இதனையடுத்து ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட கருக்கா வினோத்தின் தாயார் சாவித்ரி மற்றும் சகோதரர் முனியாண்டியிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் கிண்டி காவல் துறையினர்.

சென்னையில் திமுக பிரமுகர் மகன் வெட்டிக்கொலை - குற்றவாளிகளை தேடும் பணியில் காவல் துறையினர்:சென்னை திருவொற்றியூர் அடுத்த விம்கோநகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் திருவொற்றியூர் பகுதியில் திமுக நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இவரது மகன் காமராஜ். மாநகராட்சி பணிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்து வருகிறார். இன்று (அக்.26) காலை வழக்கம் போல் காமராஜ் அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அந்த சமயம் 6-பேர் கொண்ட மர்ம கும்பல் காமராஜை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். காமராஜை மீட்ட அக்கம் பக்கத்தினர், அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி காமராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, எண்ணூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதற்காண காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் 41-லடசம் கொள்ளை:சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (67). தொழிலதிபரான இவர், எழுதுபொருள் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் நடத்திவருகிறார். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கல்லூரி அருகே அமைந்துள்ளது. 3 நாட்கள் விடுமுறை முடிந்து அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது அலுவலகத்தில் இருந்த 41 லட்சம் ரொக்கப்பணம் காணாமல் போனது தெரிய வந்தது.

உடனடியாக இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றிய காவல் துறையினர், அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த பணத்தை திருடினார்களா? அல்லது மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நடிகையின் மகன் உயிரிழப்பு:சென்னை சாலிகிராமம், புஷ்பா காலனியைச் சேர்ந்தவர் பிரபல சினிமா கவர்ச்சி நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்கின்ற விக்னேஷ்குமார் (வயது40). அதே பகுதியில் உள்ள தசரதபுரம் 8வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த விக்னேஷ் குமார், அவரது படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற விருகம்பாக்கம் காவல் துறையினர் விக்னேஷ் குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியுள்ளனர். முன்னதாக அவர் மீது காவல்துறையினரை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சாலிகிராமம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேட்பாரற்று கிடந்தது பையால் அச்சம் அடைந்த பயணிகள்:சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் இருந்த பயணிகள் அமரும் இருக்கையில், நீண்ட நேரமாக கேட்பாரற்று பை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த பையில் வெடி குண்டு இருக்குமோ என்று பயணிகள் அச்சம் அடைந்தனர்.

இதனால் மத்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை, அந்த பையை சோதனை செய்ததில், வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது. பின்னர் பையை சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

அந்த பையை பாதுகாக்கப்பட்ட பகுதியில் வைத்து சோதனை செய்தபோது, அதற்குள் துணிகள் இருந்தது தெரிய வந்தது. பயணிகளில் யாரோ ஒருவர் அந்தப் பையை தவறவிட்டுச் சென்று இருக்கலாம் என்பதால் விமான நிலைய மேலாளரிடம் அந்தப் பை ஒப்படைக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கபட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details