தமிழ்நாடு

tamil nadu

384th birth anniversary of chennai: சென்னையும் - சினிமாவும் ஒரு சிறப்பு பார்வை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 1:51 PM IST

வந்தாரை வாழவைத்துக் கொண்டும் பல தயாரிப்பாளர்களும், நடிகர்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகர், இன்று தனது 384 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் சினிமாவும் - சென்னையும் பிரிக்க முடியாத அளவுக்கு மாறிய கதையை காணலாம்.

384th birth anniversary of chennai: சென்னையும் சினிமாவும் ஒரு சிறப்பு பார்வை!
384th birth anniversary of chennai: சென்னையும் சினிமாவும் ஒரு சிறப்பு பார்வை!

சென்னை:சினிமாவில் நடிக்கும் ஆசையில் தனது சொந்த ஊர்களை விட்டு சென்னை மாநகருக்கு வந்த இளம் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஏராளம். குறைந்தபட்சம் தெருவில் ஒருவரையோ அல்லது குடும்பத்தில் ஒருவரையாவது இந்த பட்டியலில் காண முடியும்.

அவர்களில் சிலர் வாய்ப்பு கிடைத்து சிறந்த முறையில் முன்னேறியுள்ளனர். ஆனால் பல தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் வாய்ப்பு கிடைக்காமலேயே மற்ற வேலைகளை செய்து சென்னையிலேயே வந்தேறிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஷாப்பிங் முதல் சினிமா வரை அனைத்தையும் பார்த்து வளர்ந்து உள்ளது சென்னை.

சென்னை வந்தாரை வாழ வைக்கும். பேர், புகழோடு வாழ வைக்கும் என்பது முன்னோர் கூற்று. இப்போதும் அப்படியே. எதுவுமே இல்லாமல் அடைக்கலம் தேடி வந்தவர்களை வாழ வைத்து பார்க்கும் உன்னத பூமி சென்னை. அந்த சென்னைக்கு இன்று வயது 384.

எத்தனையோ வகையில் அசுரத்தனமான வளர்ச்சி அடைந்து உள்ள சென்னையில் சினிமாவுக்கு எப்போதுமே தனி இடமும் வரலாறும் உண்டு. சினிமா மெல்ல மெல்ல வளரத் தொடங்கிய காலத்தில் இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாயகம் சென்னை தான்.

இங்கிருந்து தான் மற்ற மொழி படங்களும் எடுக்கப்பட்டு வந்தன. தெலுங்கு, கன்னடத்தில் இப்போது கொடி கட்டிப் பறக்கும் நடிகர்களை கேட்டால் எனது தாய் வீடு சென்னை தான், நான் இங்கே தான் பிறந்து வளர்ந்தேன் என்பார்கள். அந்த அளவிற்கு இங்கு தான் சினிமா உலகம் நடைபெற்று வந்தது.

அது மட்டுமின்றி ஏகப்பட்ட ஸ்டூடியோக்கள் இங்கு இயங்கி வந்தன. ஏவிஎம், பிரசாத், ஜெமினி, விஜயா, என 20க்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்கள் இருந்தன. ஆனால் இப்போது மிஞ்சி இருப்பது ஏவிஎம்மும், பிரசாத்தும் மட்டுமே. சென்னையில் முதல் ஸ்டூடியோ உருவான இடம் புரசைவாக்கம் தான்.

நடராஜ முதலியார் எனபவர் தொடங்கிய இந்த ஸ்டூடியோ தான் 'கீசகவதம்' என்ற முதல் மௌனப் படத்தை தயாரித்தது. அதன் பிறகு அதே பகுதியில் சீனிவாசா சினிடோன், இம்பீரியல் மூவிடோன் ஆகிய ஸ்டூடியோக்கள் உருவாகின. அதன்பிறகு தான் கோடம்பாக்கம் சினிமாவின் தாயகம் ஆனது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என எல்லா மொழி படங்களும் இங்கிருந்து தான்‌ உருவாகின. 1950களுக்கு பிறகு கோடம்பாக்கம் தென்னிந்திய திரைப்படங்களின் தாயகமாக மாறியது. கோடா பாக் அதாவது குதிரைகளின் தோட்டம் என்று அழைக்கப்பட்ட இந்த இடம்தான் காலப்போக்கில் கோடம்பாக்கம் என்றானது.

இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் இருந்து அனிருத்தை கடத்திட்டு போய்டுவேன்" - விஜய் தேவரகொண்டா!

அக்காலத்தில் இந்த இடம் விவசாய நிலங்களாகவும் தோட்டங்களாகவும் இருந்தது. அதன்பிறகு பல்வேறு ஸ்டூடியோக்கள் உருவாகின. எம்ஜிஆர், சிவாஜி, ராஜ்குமார், என்டிஆர், நாகேஸ்வர ராவ், பிரேம் நசீர் மற்றும் வட இந்திய நடிகர்களான திலீப்குமார், தர்மேந்திரா போன்ற ஜாம்பவான்கள் பாதம் பட்ட பூமியாக சென்னை இருந்தது. ஆண்டுக்கு 300க்கும் மேற்பட்ட படங்கள் எடுக்கப்பட்டு வந்தன.

அந்தக் காலத்திலேயே மிகப் பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'சந்திரலேகா'. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இப்படத்தை எடுத்தது ஜெமினி ஸ்டூடியோவின் அதிபர் எஸ்.எஸ். வாசன். அண்ணா மேல்பாலத்தின் கீழ் கம்பீரமாக இருந்தது இந்த ஸ்டூடியோ.

அதன்பிறகு ஏவிஎம், பிரசாத், வாகினி ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமான படங்களை தயாரித்து வந்தன. இப்படி மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த தொடங்கியது தமிழ் சினிமா. தமிழ் மக்களையும் சினிமாவையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் தமிழ் சினிமாவில் இருந்து நான்கு முதலமைச்சர்கள் தமிழகத்தை ஆண்டு உள்ளனர்.

இதில் இருந்தே தெரியும் தமிழ் மக்கள் சினிமாவுக்கு எந்த அளவு இடம் கொடுத்துள்ளனர் என்று. அதுவும் சென்னை மக்கள் ஒருபடி மேலே இருப்பவர்கள். ஆரம்ப கால படங்களில் போக்குவரத்து நெரிசல் அற்ற சென்னையை காட்டி இருப்பார்கள்.‌ அதனை இப்போது பார்க்கும் போது எப்படி இருந்த சென்னை இப்படி ஆகிவிட்டதே என்று தோன்றும்.

கூட்டமில்லா சென்னையின் சாலைகள், பரபரப்பு இல்லாத மக்கள், மெரீனா, அப்போதைய சென்னை நகர‌ பேருந்துகள் என தமிழ் சினிமா காட்டியது ஏராளம். அதன்பிறகு சென்னையை கதைக்களமாக கொண்ட தமிழ் படங்கள் வரத் தொடங்கின.

அம்மக்களின் வாழ்க்கை, பேச்சு வழக்கு, கலாச்சாரம் ஆகியவற்றை தங்களது படங்களில் காட்டத் தொடங்கினர் அப்போதைய இயக்குனர்கள். இது இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக சொல்வதென்றால் வெங்கட்‌பிரபு இயக்கிய சென்னை 600028 படம் சென்னையில் வாழும் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை பற்றியது.

அதனை அத்தனை அழகாக எடுத்திருப்பார் வெங்கட் பிரபு. விஜய் இயக்கிய மதராசபட்டினம் படம் சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை நகரை அற்புதமாக காட்டியது. கூவம் நதியில் படகு ஓடும் காட்சியை பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கும்.

ஆனால் சமீப கால படங்களில் வட சென்னை மக்கள் என்றால் வன்முறையானவர்கள் என்று காட்டுகின்றன. இதனை மாற்றி அவர்கள் வாழ்க்கையை அப்படியே சொன்ன படங்கள் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி, மெட்ராஸ் போன்றவை. வட சென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்களாக அவை இருந்தன.

அதேபோல் தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் வேலை செய்யும் வெளிமாவட்ட தொழிலாளர்களின் காதல், வலியை சொன்ன படம் அங்காடித் தெரு. புதுப்பேட்டை வட சென்னையில் உள்ள ஒரு ரவுடியின் கதையாக எடுக்கப்பட்டிருக்கும்.

அதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா திரைப்படம் மெரினா கடற்கரையில் ஆதரவற்று வாழும் மனிதர்களின் வலியை நகைச்சுவை கலந்து சொன்ன படம். இப்படி சென்னையும் சினிமாவும் எப்போதும் பின்னி பிணைந்து இருப்பவை. சென்னை வரலாறு மற்றும் அதன் வளர்ச்சியில் சினிமாவின் பங்கும் மிக முக்கியம் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

இதையும் படிங்க: Jailer Box Office: சரிந்த 'ஜெயிலர்' பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. காரணம் இது தானா?

ABOUT THE AUTHOR

...view details