தமிழ்நாடு

tamil nadu

பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை விதிகளில் மாற்றம் - உயர் கல்வித்துறை முடிவு

By

Published : Jun 22, 2023, 10:11 AM IST

பி.இ, பி.டெக், பி.ஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தரவரிசைப் பட்டியலை நிர்ணிப்பதற்கான முறையில் மாற்றம் செய்து உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை விதிகளில் மாற்றம்!உயர்கல்வித்துறை முடிவு
பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை விதிகளில் மாற்றம்!உயர்கல்வித்துறை முடிவு

சென்னை: பொறியியல் படிப்பில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 5ஆம் தேதி முதல் ஜுன் மாதம் 4ஆம் தேதி வரையில் பெறப்பட்டன. பொறியியல் படிப்பில் சேர்வதற்கு 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவர்கள் கட்டணங்களைச் செலுத்தி இருந்தனர்.

ஜூன் 4-ம் தேதி வரை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்நிலையில், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும், பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

பி.இ, பி.டெக், பி.ஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தரவரிசைப் பட்டியல் நிர்ணயிப்பதற்கான முறையில் மாற்றம் செய்து உயர் கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில்,உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில்,

2023-2024ஆம் ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விதி 2007 திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வு ரத்தானதால் நடப்பாண்டு தரவரிசைப் பட்டியலில் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடப்படாது. 2021-2022ஆம் கல்வியாண்டில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

தரவரிசை மதிப்பெண்கள், இயற்பியலில் பெற்ற மதிப்பெண்கள், கணித பாட மதிப்பெண்கள், விருப்ப பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் பிறந்த தேதி உள்ளிட்டவை ஒன்றாக இருக்கின்றபோது இறுதியாக ரேண்டம் எண்கள் பயன்படுத்தப்படும்.

ரேண்டம் எண் கணக்கீடு வரிசையில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால், கடந்த 2021- 22ஆம் கல்வி ஆண்டில் கரோனா காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டனர்.

இதனால் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசை மதிப்பெண், இயற்பியலில் பெற்ற மதிப்பெண், விருப்ப பாடத்தில் பெற்ற மதிப்பெண் பொறியியல் சேர்க்கைக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி, பிறந்த தேதி ஆகிய அனைத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நிலையில் இருக்கும்போது, கடைசியாக ரேண்டம் எண்கள் பயன்படுத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிவிப்பு: ஜூலை 3 ஆம் தேதி வகுப்புகள் துவக்கம்!

ABOUT THE AUTHOR

...view details