தமிழ்நாடு

tamil nadu

போலி ஆவணம் சமர்பித்து பத்திரப்பதிவு; விஜிபி குழுமத்தின் நிர்வாகி மீது வழக்கு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 7:10 PM IST

VGP Group: பெங்களூரு காவல் துறையினரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்ததாக விஜிபி குழுமத்தின் நிர்வாகி விஜிஎஸ் அமிர்தாஸ், ராஜேஷ் உள்பட ஐந்து பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மாதாவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2016ஆம் ஆண்டு பல கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் ஒன்றை விஜிபி குழுமத்தின் நிர்வாகி விஜிஎஸ் அமிர்தாஸ் ராஜேஷ் உள்ளிட்டோர் பத்திரப்பதிவு செய்துள்ளனர். அப்போது அசல் ஆவணங்களை கொடுக்காமல், நகல் ஆவணங்களை மட்டும் கொடுத்துவிட்டு அசல் ஆவணங்கள் பெங்களூருவில் தொலைந்து விட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அது தொடர்பாக ரசீது ஒன்றை வாங்கியதாக கொடுத்து பதிவு செய்துள்ளனர்.

இதனை சோதனை செய்த அப்போதைய சார்பதிவாளர் ஜாபர் சாதிக் என்பவர், ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருந்துள்ளதால், இது தொடர்பாக பெங்களூரு காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு தகவலும் கேட்டுள்ளார். பிறகு இது போலியான ஆவணங்கள் என்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

இதனையடுத்து, 2016ஆம் ஆண்டு பதிவு செய்த பத்திரப்பதிவை 2018ஆம் ஆண்டு ரத்து செய்து அப்போதைய சார்பதிவாளர் ஜாபர் சாதிக் உத்தரவிட்டார். மேலும், இது குறித்து பெங்களூரு காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதி விசாரணை மேற்கொண்டதில், அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஒருவரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தியதும், மேலும் போலியாக பெங்களூரு காவல் துறையினர் கொடுத்ததாக ஒரு அறிக்கையும் கொடுத்து பத்திரப்பதிவை செய்ததும் தெரிய வந்து உள்ளது.

இதனையடுத்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விசாரணை அறிக்கையை சமர்பித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது சார்பதிவாளராக உள்ள கீதா என்பவர் இது குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப் பிரிவில் விஜிபி அமிர்தாஸ் ராஜேஷ் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:காவல் நிலையத்தினுள்ளே துணிகரம்.. நெல்லை டவுண் காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details