தமிழ்நாடு

tamil nadu

ராணிப்பேட்டை கீழ்வீதி ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளி கட்டுமானப் பணியில் தொய்வு - அண்ணாமலை கடும் கண்டனம்!

By

Published : Apr 18, 2023, 10:59 PM IST

ராணிப்பேட்டையில் உள்ள கீழ்வீதி கிராமத்தில் செயல்பட்டு வந்த ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள பெற்றோர், மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கீழ்வீதி ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளி கட்டுமானப் பணியில் தொய்வு - அண்ணாமலை கடும் கண்டனம்!
கீழ்வீதி ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளி கட்டுமானப் பணியில் தொய்வு - அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், பள்ளி கட்டடம் பழுதடைந்து இருந்துள்ளது. இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு கட்டடத்தை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தி உள்ளனர். இதனிடையே பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 40 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பள்ளிக் கட்டடம் சார்ந்த கட்டுமானப் பணியை இதுநாள் வரையிலும் தொடங்கவில்லை என பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், அங்கிருந்த பள்ளி மாணவர்களுக்கு அதே பகுதியில் வாடகை வீட்டில் பள்ளி செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், பள்ளியை உடனடியாக கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை பள்ளியைக் கட்டுவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ராணிப்பேட்டை கீழ்வீதி பஞ்சாயத்து ஆதி திராவிடர் ஆரம்பப் பள்ளி, 2021ஆம் ஆண்டு முதல், பள்ளிக்கான கட்டடம் இல்லாமல், மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி இல்லாத வாடகைக் கட்டடம் ஒன்றில் இயங்கி வருவதாக நாளிதழில் வந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தப் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குவதாக, அறிவிப்பு மட்டும் வெளியிட்டு விட்டு, நிதி ஒதுக்காமல் மாணவர்களையும், பெற்றோர்களையும் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது, திறனற்ற திமுக அரசு. பட்டியல் சமூக மக்களுக்காக, மத்திய அரசு, ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கும் திமுக அரசு, அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்றாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அதே கீழ்வீதி பகுதியில் இருக்கும் மற்றொரு அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் இருக்கும்போது, ஆதி திராவிடர் ஆரம்பப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யாமல் போலி சமூக நீதி பேசித் திரிகிறது திமுக. பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தியும், கண்டுகொள்ளாமல், ஆசிரியர்களுக்கான ஊதியமும் வழங்காமல், ‘வேண்டுமென்றே பட்டியல் சமூக மாணவர்களை பிரித்துப் பார்க்கிறது திமுக’ என்றே கருத வேண்டியிருக்கிறது.

உடனடியாக, தமிழகம் முழுவதும் இருக்கும் ஆதி திராவிடர் பள்ளி, விடுதிகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, பட்டியல் சமூக மக்களின் நலனுக்காக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தவறினால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவும் தமிழ்நாடு பாஜக தயங்காது எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி ஆள் இன்றி கிடப்பு; மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details