தமிழ்நாடு

tamil nadu

"டாஸ்மாக் இயங்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும்" - பாஜக கோரிக்கை!

By

Published : Jan 12, 2023, 9:01 PM IST

டாஸ்மாக் இயங்கும் நேரத்தை பிற்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை குறைக்க அரசு முன்வர வேண்டும் என பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.

BJP
BJP

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஜன.12) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், "ஆளுநர் உரையில் மொழி, கலாசாரம், பண்பாட்டை பேணி காப்பதாக சொன்னதை வரவேற்கிறேன். அலுவல் மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்பதையும் வரவேற்கிறேன். பிரதமர், காசி பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஏற்பாடு செய்ததையும், காசி தமிழ் சங்கம், ஐநா சபையிலும் தமிழில் கருத்துகளை கூறுவதையும் இங்கு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆளுநர் உரையில் கரோனா வைரஸ் வந்தவுடன் கோவாக்சின், கோவிஷீல்டை தமிழ்நாட்டிற்கு வழங்கிய பிரதமருக்கு நன்றி கூறியிருக்கலாம். இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்களை மாநில அரசு மீட்டதாக கூறப்பட்டிருந்தது. மத்திய அரசால்தான் மீட்டிருக்க முடியும். மாநில அரசு மட்டும் செய்ய முடியாது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு ஏற்காததால் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற மாநில மாணவர்களுக்கு அந்த இட ஒதுக்கீடு கிடைக்கும் சூழல் உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்.

இதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. மத்தியில் இருக்கும் கல்வி நிறுவனங்களிலும் தமிழ்நாடு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீங்களும் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

மீண்டும் பேசிய நயினார் நாகேந்திரன், "டாஸ்மாக் இல்லாமல் அரசை நடத்த முடியாது. ஆனால், அதன் நேரத்தை பிற்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை குறைக்க அரசு முன்வர வேண்டும். தமிழ்நாடு கேரள எல்லையில் கேரள அரசு சார்பில் டிஜிட்டல் முறையில் நில அளவீடு நடக்கிறது" என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "பத்திரிகை செய்தி அடிப்படையில் நாங்கள் அது குறித்து ஆய்வு நடத்தினோம். டிஜிட்டல் சர்வே ஏதும் நடக்கவில்லை, எங்கள் அறிவுறுத்தல் இல்லாமல் தமிழ்நாடு எல்லையில் நில அளவீடு செய்ய வேண்டாம் என கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். தேனி உட்பட எல்லைப் பகுதியில் உள்ள ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: "ராமர், ராமாயணத்தைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?" - சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

ABOUT THE AUTHOR

...view details