தமிழ்நாடு

tamil nadu

சத்தியமங்கலம் புலிகள் வேட்டையில் பவேரியா கொள்ளையர்களுக்கு தொடர்பு.. உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 8:17 PM IST

Bavaria Bandits Tiger Poaching: சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையில், பவேரியா கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வனத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் வேட்டையாடப்பட்டது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (அக்.13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு வனத்துறை தரப்பில், புலிகள் வேட்டையில் பவேரியா கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய குற்றவாளியை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளதாகவும், சத்தியமங்கலம் வழக்கில் அவரை கைது செய்யும் வகையில் சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு கோரிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டவரை சத்தியமங்கலம் புலிகள் வேட்டை வழக்கில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதேபோல யானைகள் வேட்டை தொடர்பான வழக்கில் தொடர்புடையவர்களை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் மற்றும் சிபிஐ எஸ்.பி. ஆகியோர் காணொலி காட்சி மூலம் நவம்பர் 8ஆம் தேதி ஆஜராகும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தமிழ்நாடு - கேரள வனப்பகுதியில் ரயில்களில் அடிபட்டு, யானைகள் பலியாவதை தடுப்பது தொடர்பான வழக்கில், ஏற்கனவே ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, அந்த பாதையை யானைகள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே அப்பகுதியில் எந்தெந்த பகுதியில் கூடுதலாக சுரங்கப் பாதைகள் அமைக்கலாம் என்பது குறித்து தமிழ்நாடு - கேரள வனத்துறை அதிகாரிகளும், ரயில்வே அதிகாரிகளும் இணைந்து ஆய்வு செய்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சென்னை வரும் சோனியா காந்தி.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details