தமிழ்நாடு

tamil nadu

ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டும் இளைஞரை கைது செய்யக்கோரி பின்னணி குரல் கலைஞர் புகார்!

By

Published : Jun 15, 2022, 7:48 AM IST

சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுக்கு காதல் வலை வீசி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் வாலிபர் குறித்து பெண் பின்னணி குரல் கலைஞர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆபாச வீடியோ எடுத்து பல பெண்களை மிரட்டும் இளைஞர் மீது பின்னணி குரல் கலைஞர் புகார்!
ஆபாச வீடியோ எடுத்து பல பெண்களை மிரட்டும் இளைஞர் மீது பின்னணி குரல் கலைஞர் புகார்!

சென்னை : பெண் பின்னணிக் குரல் கலைஞர் ஒருவர், தனது காதலன் பல பெண்களை காதலித்து ஏமாற்றியதாகவும், பல வழிகளில் பாலியல் தொல்லைகள் கொடுத்துவிட்டு, தற்போது மீண்டும் வேறொரு பெண்ணை வரும் 16 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக கூறி, அத்திருமணத்தை தடுத்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நான் திருமணமாகி 2016 ஆம் ஆண்டு விவாகரத்தான பெண். என்னுடைய காதலர் பெயர் விக்ரம் வேதகிரி. அவர் சென்னை திருநின்றவூரில் வசித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு குறும்படம் ஒன்றுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் தேவைப்படுவதாக கூறி என்னை அணுகினார். வேலை சார்ந்த விஷயங்களைப் பேசத் தொடங்கி, எனக்கு திருமணமாகி விவாகரத்தானது உட்பட என் சொந்த விஷயங்கள் அனைத்தையும் அவர் தெரிந்துகொண்டார். பின் 2021 ஆம் ஆண்டு நேரில் சந்திக்கத் தொடங்கியதும் விக்ரம் என்னை காதலிப்பதாக தெரிவித்தார்.

அவரது காதலை முதலில் மறுத்த நான் நாளடைவில் கவிதைகள், கவிதை வீடியோக்கள் அனுப்பி அவர் மேற்கொண்ட காதல் நடவடிக்கைகளை ரசிக்கத் தொடங்கி நானும் காதலிக்க தொடங்கினேன். ஆனால் அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், தன்னை அவரின் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவைத்து, தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரகசியமாக திருமணமும் செய்துகொண்டார்.

இந்த கல்யாணத்திற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி என்னுடைய வீட்டில் வந்து தங்கி விரைவில் ஊர் அறிய திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என்னுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டார்.

திருமண ஆசைகாட்டி நிச்சயதார்த்தம் வரை முடிந்த பின்னரும், எல்லோருக்கும் தெரியும்படி திருமணம் செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்தி என்னுடன் உடலுறவில் மட்டுமே நாட்டம் காட்டி பாலியல் இச்சைகளை என் மீது திணித்து பல வழிகளில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதற்கு நான் மறுத்த போது என்னை தாக்கவும் செய்தார்.

அதைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் நான் காவல்துறையை நாடியபோது விக்ரம் அவரை மன்னித்து விடுமாறு கூறி என்னை தடுத்து நாடகமாடினார் காவல்துறையினரிடம் செல்வதை தடுத்து நிறுத்தினார். ஆனால் தொடர்ந்து விக்ரம் என்னை அவரது பாலியல் இச்சைகளுக்கு இணங்க வைத்ததை பொறுக்க முடியாமல் தட்டிக்கேட்டபோது என்னிடம் சொல்லாமல் தலைமறைவாகி விட்டார். எனது லேப்டேப்-ஐ அவர் உடன் எடுத்துச் சென்றுவிட்டார்.

பின்னர் எனது சகோதரர் மூலம் பேசி லேப்டாப்-ஐ திரும்பக் கேட்டபோது எங்களை மிரட்டிய விக்ரம் 20 ஆயிரம் பணத்தைப் பெற்றுக்கொண்டே லேப்டாப்-ஐ திருப்பிக் கொடுத்தார். அதேபோல காதலிக்கத் தொடங்கியது முதல் ரகசியமாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தது வரை என்னிடம் 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் பெற்று செலவு செய்துள்ளார்.

விக்ரமின் உடைந்த செல்போன் ஒன்று எனது வீட்டில் விட்டுச் சென்றார். அதை நான் சரிசெய்து பார்த்த போது, ஆபாசப் புகைப்படங்களையும், பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் ,அவர்களுடன் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்திருப்பதையும் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இவ்வாறு பெண்களுக்கு காதல் வலைவிரித்து, உல்லாசமாக இருந்து அதை கதையாக மாற்றி சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

என்னைப் போல் பல பெண்களை சமூக வலைதளம் மூலம் ,குறும்படத்திற்கு நடிக்க அழைப்பது போன்றும், குறும்படம் எடுப்பதற்கான பணிகள் அணுகுவது போல பெண்களுக்கு வலை விரித்தது தொடர்பான சமூகவலைதள சாட்சிகள் விக்ரம் போனிலிருந்து நான் எடுத்து வைத்துள்ளேன்.

மேலும், அவரிடம் திரும்பப் பெற்ற எனது லேப்டாப்பில் இருந்து அவரது மின்னஞ்சல் மூலம் பல பெண்களுடன் எடுத்துக்கொண்ட ஆபாசப் படங்களை நான் எடுத்து வைத்துள்ளேன். குடும்ப சூழலில் சுணக்கம் ஏற்பட்டு மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் சினிமா ஆசை உள்ள பெண்களையும் குறிவைத்து விக்ரம் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்புகொண்டு ஆபாச மெசெஜ் செய்துள்ளார். தன்னுடன் பழகும் போது ஆபாசமாக வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிடாமல் இருக்க பத்து லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நாளை மறுநாள் வேறொரு பெண்ணுடன் விக்ரமுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அப்பெண்ணின் வாழ்க்கையை காவல்துறை காப்பாற்ற வேண்டும். விக்ரம் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுத்து அவரால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும். ஏற்கனவே வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க :ஊர் நாட்டாமையை எதிர்த்து பேசியவரை காலில் விழவைத்த கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details