தமிழ்நாடு

tamil nadu

சென்னை ஐஐடியில் ஆந்திர மாணவர் தற்கொலை - தொடரும் தற்கொலைகள் குறித்து போலீஸ் விசாரணை!

By

Published : Mar 14, 2023, 2:48 PM IST

Updated : Mar 14, 2023, 5:47 PM IST

சென்னை ஐஐடியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதிக அரியர்கள் இருந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வைபு புஷ்பக் ஸ்ரீசாய் என்ற மாணவர் சென்னை ஐஐடியில் பிடெக் மூன்றாமாண்டு படித்து வந்தார். மாணவர் ஐஐடி விடுதியில் தங்கி படித்ததாக தெரிகிறது. இந்த நிலையில், இன்று(மார்ச்.14) மாணவர் புஷ்பக் வகுப்புக்கு செல்லவில்லை. இதனால் சக மாணவர்கள், அவரது விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது, மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கோட்டூர்புரம் போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக ஐஐடி வளாகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள், விடுதியில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் புஷ்பக் தற்கொலை கடிதம் ஏதேனும் எழுதி வைத்துள்ளாரா? தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர் புஷ்பக்கின் செல்போனையும் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவருக்கு அதிக அரியர்கள் இருந்ததாகவும், அதனால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர் புஷ்பக் தற்கொலை விவகாரம் தொடர்பாக ஐஐடியில் உள்ள கமிட்டி விரிவான விசாரணை நடத்தி வெளிப்படையான அறிக்கை வெளியிடும் என ஐஐடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டதாகவும், கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஐஐடியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் சமூக அழுத்தத்தின் காரணமாக தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது எனவும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக உடல் ரீதியான பிரச்சனை, குடும்ப பிரச்சனை, படிப்பதில் ஏற்படும் மன அழுத்தம், பணப் பிரச்சனை ஆகிய நான்கு காரணங்களுக்காக மட்டுமே மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற தற்கொலைகளை தடுக்க ஐஐடியில் தனியாக கமிட்டி அமைக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பாக மாணவர்கள் பேராசிரியர்கள் ஆகியோருக்கு கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த ஒரு மாதத்தில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் சென்னை ஐஐடியில் நடந்துள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் தொடர் தற்கொலைகள் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் 4.5 கிலோ தங்கம் மீட்பு!

Last Updated :Mar 14, 2023, 5:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details