தமிழ்நாடு

tamil nadu

தமிழகத்தில் 42 கடலோர காவல் நிலையங்களில் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி - டிஐஜி கயல்விழி

By

Published : Jun 26, 2023, 10:21 AM IST

தமிழ்நாடு முழுவதும் 42 கடலோர காவல் நிலையங்களிலும் போதைப் பழக்கத்தை ஒழிக்க விழிப்புணர்வு நிகழ்வு நடத்தி வருகின்றனர் என டிஐஜி கயல்விழி கூறினார்.

போதை பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி
போதை பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி

சென்னை: ஜூன் 26ஆம் தேதியான இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கடலோர காவல்படை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதையில்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடலோர காவல் படை டிஐஜி கயல்விழி, நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா, மற்றும் விஜய் டிவி நவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயகோபால் அரசு பள்ளி மாணவிகள் போதைப் பழக்கத்தினால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என சமூக வலைதள மீம்ஸ் மூலம் காட்சிகளை வெளிப்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திராஜா, “என்னுடைய அப்பா ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக மதுப் பழக்கத்திற்கு மிகவும் அடிமையாகி இருந்தார். மதுப் பழக்கம் அதிகமாக இருந்ததால் ஜாண்டிஸ் போன்ற உடல் நலக் குறைபாடு என் அப்பாவிற்கு ஏற்பட்டது. அந்த மது பழக்கத்தில் இருந்து தற்போது தான் வெளி வந்தார். அந்தப் பழக்கத்தில் இருந்து வெளி வந்து புதிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மாற்றம் ஒன்று தான் மாறாதது. அடுத்த தலைமுறை நாம் தான் இது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்” என பேசினார்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு கடலோர காவல்படை டிஐஜி கயல்விழி கூறியதாவது, “மெரினா கடற்கரையில் அதிகமான பொதுமக்கள் கூடுவது வழக்கம் என்பதால், இது போன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினால் தான் மக்களிடம் சென்றடையும். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் உறுதி மொழி ஏற்றனர். போதைப் பழக்கத்தினால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என பள்ளி மாணவர்கள் சமூகவலைதள மீம்ஸ் மூலம் வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு முழுவதும் 42 கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. அனைத்து கடலோர காவல் நிலையங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் காவல் நிலையம் உள்ள சாலைகளில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் போதைப் பொருட்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு மணற்சிற்பம் உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நடிகர் கார்த்தி, நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ், உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் - நடிகர் விஜய் மீது காவல் ஆணையரிடம் புகார்!

ABOUT THE AUTHOR

...view details