தமிழ்நாடு

tamil nadu

தி.நகர் சத்யா மீதான சொத்து குவிப்பு வழக்கு.. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நிறைவு... இருவேறு கருத்துகளால் குழப்பம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 8:57 AM IST

Updated : Sep 14, 2023, 9:20 AM IST

DVAC Raid Conclude in Former MLA T.nagar Sathya house : அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் சத்யாவிற்கு சொந்தமான 22 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றதாகவும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

t nagar sathya
தி நகர் சத்யா

சென்னை:அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான டி.நகர் சத்யாவிற்கு சொந்தமான 22 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று (செப் 13) காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சத்யாவின் வீட்டின் வெளியே ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் சம்பவ இடத்திற்கு சென்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை செய்தார். அதன் பிறகு அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று (செப். 13) காலை முதல் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை மாலையில் நிறைவு பெற்றது. இது குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், "கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சத்யா அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது பெயரிலும், தனது மனைவி மற்றும் மகன் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது.

அதன்படி நேற்று(செப். 13) காலை முதல் சென்னை, கோயம்புத்தூர், திருவள்ளூர் ஆகிய 22 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையானது நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் சத்யாவின் இல்லம் மற்றும் தொடர்புடைய இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சத்யாவின் வீட்டிலிருந்து பணமோ, நகையோ எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. தொடர்ந்து வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக" லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.நகர் சத்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது, "காலை 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் என் வீட்டில் சோதனை செய்து அனைத்தையும் ஆய்வு செய்தனர். அதன் பிறகு சோதனைக்கு உண்டான ஆவணங்களை என்னிடம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த ஆவணங்களையும் வீட்டில் இருக்கும் ஆவணங்களையும் ஒன்றாக வைத்து ஆய்வு செய்தனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை யாரும் அசைக்க முடியாது. யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எனது நெருங்கிய நண்பர் என்பதால் வடசென்னை மாவட்ட செயலாளர் ராஜேஸ் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்துள்ளது.

என்னுடைய ஆவணங்களை நான் முறையாக வைத்துள்ளேன். லஞ்ச ஒழிப்பு துறை 16 புள்ளி 33 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக தெரிவித்து உள்ளது. விசாரணைக்கு பிறகு அனைத்தும் தெரியவரும்" என்று தி.நகர் சத்யா கூறினார்.

இதையும் படிங்க:போக்சோ நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தண்டனை ரத்து; உண்மை குற்றவாளிகளை பிடிக்க உத்தரவு!

Last Updated : Sep 14, 2023, 9:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details