தமிழ்நாடு

tamil nadu

வடபழனி கோயில் நிலம் மோசடி விவகாரம்: 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

By

Published : Feb 10, 2022, 4:46 PM IST

சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 258 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை மோசடி செய்த விவகாரத்தில் வேளச்சேரி சார்பதிவாளர் உள்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த பங்காரு சாமி நாயுடு 1937ஆம் ஆண்டு, தான் வாங்கிய மாடம்பாக்கம் கிராமத்திலுள்ள 9.86 ஏக்கர் நிலத்தை வடபழனி ஆண்டவர் மீதான பக்தியின் காரணமாக கோயில் தேவஸ்தானத்திற்கு தானப்பத்திரமாக 1943ஆம் ஆண்டு எழுதிக் கொடுத்தார்.

மேலும், தனக்குப் பிறகும் தனது சந்ததியைச் சேர்ந்த வாரிசுகள் இந்த நிலத்தின் மூலம் பெறப்படும் வருமானத்தை வைத்து வடபழனி ஆண்டவர் கோயிலின் ஐப்பசி மாத 9ஆம் நாள் உற்சவத்தை நடத்த வேண்டும் எனவும், அப்படிச் செய்ய அவர்கள் தவறும்பட்சத்தில் அந்த அதிகாரத்தை கையில் எடுத்து கோயில் தேவஸ்தான நிர்வாகமே உற்சவத்தை நடத்த வேண்டும் எனவும் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தானப்பத்திரத்தின் அடிப்படையில் அந்த நிலத்திற்கான பட்டா வடபழனி ஆண்டவர் கோயில் தேவஸ்தானத்திற்கு மாற்றப்பட்டு பங்காருசாமி நாயுடுவின் வாரிசுதாரரான மீனாக்‌ஷி காளிதாஸ் என்பவரால் பராமரிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் மாடம்பாக்கம் கிராமத்திலுள்ள வடபழனி ஆண்டவர் கோயில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான சுமார் 9.86 ஏக்கர் நிலம் உள்பட சுமார் 258 கோடி ரூபாய் மதிப்புடைய 14 ஏக்கர் 80 சென்ட் நிலத்தை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி கவுண்டர் என்பவரின் மகன்கள் மணி, ரமேஷ் ஆகிய இருவருக்கு பத்திரப்பதிவு செய்துகொடுத்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அப்போதைய தாம்பரம் சார்பதிவாளரும், தற்போதைய வேளச்சேரி சார்பதிவாளருமான விவேகானந்தன் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு கந்தசாமி கவுண்டருக்குச் சொந்தமான சென்னை மாடம்பாக்கம் கிராமத்திலுள்ள சொத்து உள்பட 107 அசையா சொத்துகளை அவர்களது இரு மகன்களான மணி, ரமேஷ் ஆகியோருக்கு பிரித்துக்கொடுக்கும் விவகாரத்தில் வடபழனி ஆண்டவர் கோயிலுக்குச் சொந்தமான 9.86 ஏக்கர் நிலம் உள்பட 14 ஏக்கர் 80 சென்ட் நிலத்தை மோசடியாகச் சேர்த்து பத்திரப்பதிவு செய்து கொடுத்தது அம்பலமாகியுள்ள நிலையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடபழனி ஆண்டவர் கோயில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலத்தை மறைத்து மோசடியாக மணி, ரமேஷ் ஆகியோருக்குப் பத்திரப்பதிவு செய்து கொடுத்த நிலையில் அந்த நிலத்தை அவர்கள் விற்க முயன்றபோது இவ்விவகாரம் அறநிலையத் துறையின் கவனத்திற்கு வந்ததால், அறநிலையத் துறை மூலம் கோயில் நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு கோயில் தேவஸ்தான நிர்வாகி சங்கர் என்பவரால் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கந்தசாமி கவுண்டர் என்பவரின் இரு மகன்கள் வடபழனி ஆண்டவர் கோயில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான 9.86 ஏக்கர் நிலம் உள்பட சுமார் 258 கோடி ரூபாய் மதிப்புடைய 14 ஏக்கர் 80 சென்ட் நிலத்தை மோசடியாக தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துகொள்ள அப்போதைய தாம்பரம் சார்பதிவாளரான விவேகானந்தனுக்கு லஞ்சம் கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது.

அதனடிப்படையில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர், வடபழனி ஆண்டவர் கோயில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான சொத்து உள்பட 258 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து அறநிலையத் துறைக்கு இழப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி தற்போதைய வேளச்சேரி சார்பதிவாளராக இருந்து வரும் விவேகானந்தன், கந்தசாமி கவுண்டர் அவரது மகன்கள் மணி மற்றும் ரமேஷ் ஆகிய நான்கு பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், கூட்டு சதி, மோசடி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பழனியில் விதிகளை மீறி மனிதக் கழிவுகள் கொட்டப்படுவதாகப் புகார்: சார் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details