தமிழ்நாடு

tamil nadu

புதிய தமிழகம் கட்சிக்கு தொலைகாட்சி சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்குத் தள்ளுபடி

By

Published : Sep 29, 2021, 6:33 PM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தொலைகாட்சி சின்னம் ஒதுக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொலைகாட்சி சின்னம்
தொலைகாட்சி சின்னம்

சென்னை:தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆனால், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பொது சின்னமாக தொலைக்காட்சி ஒதுக்கப்படவில்லை எனக் கூறி, புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை நிராகரித்து செப்டம்பர் 17ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்துசெய்து, உள்ளாட்சித் தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வி.கே. அய்யர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கை மனுவை நிராகரித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

தொலைக்காட்சி சின்னம் பெற உரிமை இல்லை

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் இன்று (செப். 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்ற 15 கட்சிகளில் புதிய தமிழகம் இடம்பெறவில்லை, அதில் தொலைக்காட்சியின் சின்னமும் இல்லை. எனவே மனு மறுபரிசீலனை செய்ததில் தொலைக்காட்சி சின்னம் வழங்க மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின்படி குறைந்தபட்ச தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையைப் பூர்த்தி செய்யாததால் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் பெற உரிமை இல்லை எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கௌரவ விரிவுரையாளர் உயிரிழப்பிற்கு அரசின் அலட்சியம் காரணம் - பாமக ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details