தமிழ்நாடு

tamil nadu

“சபரிமலைக்குச் செல்லும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை அவசியம் இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 5:21 PM IST

Corona test not necessary for Sabarimala devotees: சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. கரோனா பரிசோதனை செய்யும் அளவிற்குப் பதற்றமான சூழல் தற்போது இல்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
சபரிமலைக்கு செல்லும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை அவசியம் இல்லை

சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் மீண்டும் கரோனா தொற்று திடீரென அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அரசு தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் சபரிமலைக்குச் செல்பவர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும், அதுபோன்ற பதட்டமான சூழல் இல்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தொடர்ந்து இது குறித்துப் பேசிய அவர், “காய்ச்சல் பாதிப்புகள் எங்கு இருக்கின்றதோ அந்த பகுதிகளில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் நேற்றைக்குக் கேரளா மாநிலத்தில் 280 பேருக்கு கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழக பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், கேரள மாநிலத்தின் பொதுச் சுகாதாரத் துறை அலுவலர்களோடு பேசியுள்ளார்.

கரோனா தொற்றின் பாதிப்பு என்பது மிதமான பாதிப்பாகவே உள்ளதாகவும், இன்றைய கள நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் 4 நாட்களிலேயே சரியாகி விடுவதாகவும் கேரள மாநிலத்தின் பொதுச் சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறினர்” என அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உருமாறிய கரோனா வைரஸ்:

மேலும், கடந்த 1 வாரத்திற்கு மேலாகச் சிங்கப்பூரில் உருமாறிய கரோனா வைரஸ் தொற்று பரவல் இருப்பதாக அறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சிங்கப்பூர் தேசிய நிறுவனம் (National Institute of Singapore ) அமைப்பில் உள்ள மருத்துவர்களோடு தொடர்பு கொண்டதாகக் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த உருமாறிய வைரஸ் எந்த வகையிலான பாதிப்பை உருவாக்குகிறது என கேட்டு அறிந்ததாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: தொப்பூர் கணவாய் சாலை விபத்துகளை தடுக்க தீர்வு.. ரூ.775 கோடியில் அமைகிறது 'மேம்பால சாலை' - தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தகவல்!

இதற்குப் பதிலளித்த அந்நிறுவனம், கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மூன்று அல்லது நான்கு நாட்களில் தொற்று சரியாகிவிடுவதாகவும் இருமல் மற்றும் சளி ஆகிய இரு உபாதைகள் மட்டுமே இதனால் ஏற்படுவதாகவும் தெரிவித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.

மழைக்கால சிறப்பு முகாம் விபரங்கள்:

தமிழகம் முழுவதும் 8 வது வாரம் 3000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் இதுவரை 7 வாரங்களில் 16,516 முகாம்கள் நடைபெற்று உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு உள்ளான பகுதிகளில் ரூபெல்லா தடுப்பூசி போடும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்குள்ளான 4 மாவட்டங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரை கிலோ பிளிச்சிங் பவுடர் தரப்பட்டு வருகிறது” என அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக, அடையாறு மண்டலம், வேளச்சேரி 100 அடிச் சாலை, சசிநகரில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைத் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். இந்த தொடக்க விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.இராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோ பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details