தமிழ்நாடு

tamil nadu

"தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற நடவடிக்கை" - வேளாண்துறை செயலாளர்!

By

Published : Mar 21, 2023, 5:08 PM IST

10 ஏக்கர் தொகுப்பாக உள்ள தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், வாரிசு விவசாயிகளை நெறிமுறை படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் வேளாண்மை துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Agriculture
Agriculture

சென்னை: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், வேளாண் தனி நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், "வேளாண் நிதிநிலை அறிக்கையில் மிளகாய், மல்லி, சிறு தானியங்கள் இயக்கம், கறிவேப்பிலை, முருங்கை உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் உற்பத்தியாகும் வேளாண் சார்ந்த தொழில்களில் வரக்கூடிய பொருள்களுக்கு மதிப்புக்கூட்டி அங்கே விற்பனை செய்யவோ அல்லது ஏற்றுமதி செய்யும் வகையிலோ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்கள் உண்மையானவையா? எனக் கண்டறிவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூதாதையர்கள் பெயர்களில் பட்டா இருந்து தற்போது விவசாயம் செய்து வரும் வாரிசு விவசாயிகளை நெறிமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்குவதால், வாரிசு விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் 10 ஏக்கர் தொகுப்பாக உள்ள தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு விவசாயிகளுடைய ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால்தான் இந்த திட்டத்தை செய்ய முடியும்.

குறைந்தபட்ச ஆதார விலையானது மத்திய அரசுதான் நிர்ணயிக்கும். சர்க்கரை, பருத்தி, எண்ணெய் வித்துகள் ஆகியவைகளுக்குத் தான் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெங்காயம், தக்காளி உள்ளிட்ட மற்ற தோட்டக்கலை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய கடிதம் வேண்டுமானால் எழுதலாம். இருந்தாலும் வெங்காயம், தக்காளி அனைத்து நாட்களிலும் சீரான விலைக்கு கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். மாநகர், நகரங்களில் உழவர் சந்தைகள் பெரும்பாலும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் உழவர் சந்தையை சரியாக செய்ய முடியவில்லை. அங்குள்ள உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய விவசாயிகளும், வாங்க பொதுமக்களும் அதிக அளவில் முன்வருவதில்லை. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் தமிழ்வழியிலான தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பட்டப் படிப்புகள் 95 சதவீதம் முழுமை அடைந்துள்ளன. மேலும் ஆர்வம் அதிகமாக உள்ள படிப்புகளுக்கு தேவையை பொறுத்து செயல்படுத்த உள்ளோம்" என்று கூறினார்.

முன்னதாக இன்று காலையில், 2023-24ஆம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் போல பச்சை நிறத்துண்டு அணிந்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: நெல்லுக்கான ஆதாரவிலை குறித்த அறிவிப்பு இல்லை - தஞ்சை விவசாயிகள் கவலை!

ABOUT THE AUTHOR

...view details